எடப்பாடி பழனிசாமி வரும் 15 ஆம் தேதி ஆஜராக சம்மன்! அவதூறு வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி தொடர்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 15 ஆம் தேதி ஆஜராகும்படி கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்தது. தேர்தல் தோல்வி குறித்து கடந்த 2024 ம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என்று விமர்சனம் செய்திருந்தார்.

கே.சி.பழனிசாமியின் விமர்சனம் குறித்து அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “என்னை விமர்சனம் செய்த கே.சி.பழனிச்சாமி அதிமுக உறுப்பினரே கிடையாது. ரோட்டில் போவோர், வருபவர் எல்லாம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆகிவிட முடியாது. அவர் பேசுவதற்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது,” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து தம்மை அவமதிப்பதாக கருதிய கே.சி.பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இது குறித்து கே.சி.பழனிசாமியிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியிருந்தது. விசாரணையின் போது தாம் அதிமுகவில் இருப்பதையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஆதாரங்களையும் அவர் சமர்பித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கான முகாந்திரம் இருப்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து இந்த வழக்கு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கே சி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து குற்றவியல் அவதூறு வழக்கில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Share on: