`ஏன் வேலி அமைக்கவில்லை?’ – நீதிமன்றத்தில் அனல் பறந்த விவாதம்!
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்திலுள்ள வளையமாதேவி, மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் இன்று உயர் நீதிமன்றத்தில் என்.எல்.சி விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தன்னுடைய மனுவில், “என்.எல்.சி நிறுவனத்துக்காக 2007-ம் ஆண்டு, நவம்பர் மாதம் எனது நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளாக அந்த நிலத்தைப் பயன்படுத்தாமல், தற்போது நெல் பயிரிடப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 26-ம் தேதி கால்வாய் வெட்டுவதாகக் கூறி, பயிர் விளைந்து நிற்கும் நிலத்தில் புல்டோசர்களை வைத்து நாசப்படுத்தியிருக்கின்றனர். என்னுடைய நிலம் மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் 50,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
பாடுபட்டு மேற்கொள்ளப்பட்ட விவசாயத்தையும், எங்களது வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தை சுவாதீனம் எடுக்கின்றனர். நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வு, செட்டில்மென்ட் உரிமைச் சட்டத்தின் 101-வது பிரிவு என்பது, குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தை 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தாவிட்டால், உரியவரிடம் அந்த நிலத்தை திருப்பிக் கொடுக்க வகைசெய்வதால், அதன்படி எனது நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். நிலத்தில் அறுவடையை முடிக்கும்வரை எங்களது அனுபவ உரிமையில் தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு, வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி முறையிட்டார். அதை ஏறறுக்கொண்ட நீதிபதி, இன்று பிற்பகலில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்த வழக்கறிஞர் பாலு, “இந்தப் பிரச்னையால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது” எனக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட என்.எல்.சி தரப்பு வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “நண்பர் பாலு கடலூரில் பதற்றமான சூழல் நிலவுவதாகக் கூறுகிறார். அவரது கட்சியினரால்தான் பதற்றம் ஏற்படுகிறது. இதை அரசியலாக்குகின்றனர். நிலம் எப்படிக் கையகப்படுத்தப்பட்டது, எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டது என்பதை நாளையே அறிக்கையாகத் தாக்கல் செய்கிறோம்” என்றார்.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எத்தனை ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது என்ற நீதிபதியின் கேள்விக்கு, “விவசாயமே நடைபெறவில்லை” என என்.எல்.சி தரப்பு கூற, “அப்படியெனில், ஊடகங்களில் வெளியான புகைப்படத்தை நீங்கள் பார்க்கவில்லையா… எப்படி விவசாயமே நடைபெறவில்லை என்று கூறுகிறீர்கள்… விவசாய நிலத்தை சேதப்படுத்தினீர்களா, இல்லையா என்பதே என் கேள்வி. நிலத்தைக் கையகப்படுத்திவிட்ட பின்னர், ஏன் அவர்களை விவசாயம் செய்ய அனுமதித்தீர்கள்… இரும்புவேலி அமைத்திருக்க வேண்டியதுதானே?” என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பல கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு, “என்.எல்.சி-க்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் இருப்பதால், அது சாத்தியப்படவில்லை” என விளக்கமளிக்கப்பட்டது. அதையடுத்து, “அப்படியெனில், குறைந்தபட்சம் வெளிநாடுகளில் இருப்பதுபோல், நீங்கள் மேற்பார்வையாவது செய்திருக்கலாமே… நீங்கள் பயன்படுத்தாததால்தானே அவர்கள் விவசாயம் செய்தார்கள்?” என நீதிபதி கேள்வியெழுப்பினார்.