ஒன்றுபட்ட அதிமுகவாக இல்லாதது பொதுமக்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களை அதிமுகவிற்கு வாக்களிக்க யோசிக்க வைக்கிறது – கே.சி.பழனிசாமி
* 2014-ல் மோடியா? லேடியா? என்று களம் அமைத்து 40-ல் 38 தொகுதிகளை வென்றார் அம்மா. 2016-ல் அதிமுக தனித்து ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்து பத்து மாதங்களில் (பிப்ரவரி, 2017) எடப்பாடி பழனிசாமி பொறுப்பெடுத்துக்கொண்டார். அதிமுக ஆளுகிற கட்சியாகவும், 50 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மூன்றாவது பெரிய கட்சியாகவும் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சிப்பொறுப்பும்,கட்சிப்பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் அடுத்தடுத்து 8 தொடர் தோல்விகளை மட்டும் தான் EPS-ஆல் பெறமுடிந்தது. அதற்கு இதுவரை கூறப்பட்ட காரணங்கள் பாஜக கூட்டணி மற்றும் இரட்டை தலைமை ஆனால் இந்த தேர்தலில் பாஜக கூட்டணி இல்லை மற்றும் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார். அப்படி இருந்தும் கள நிலவரம் சாதகமாக உள்ளதா?
* தமிழக அரசியலில் அதிமுக வாக்கு வங்கி 35, திமுக வாக்கு வங்கி 30%, பாஜக உட்பட பிற கட்சிகள் சேர்ந்து 15%, வேட்பாளர்களை பார்த்து தேர்தலுக்கு தேர்தல் முடிவெடுப்பவர்கள் 20% என்பதாக தான் களம் இருந்தது. தற்பொழுது தேர்தல் களம் என்பது 4% இருந்த பாஜக வாக்கு வங்கி 10-12% ஆக உயர்ந்துள்ளதாக பேசப்படுகிறது. திமுக கூட்டணி பலத்தால் 45% வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் அதிமுக தன்னுடைய 35% வாக்கில் இருந்து இன்று 20% – 25% வாக்குகளுக்கு ஊசலாடிக்கொண்டிருக்கிறது. பாஜக வளர்ச்சிக்கு என்ன காரணம்?, அதிமுக வாக்கு வங்கி வீழ்ச்சிக்கு என்ன காரணம்? திமுகவின் வாக்கு வங்கி உயர்வுக்கு என்ன காரணம் என்று EPS எண்ணிப்பார்க்கவேண்டும்.
* நேற்றைய திருச்சி கூட்டத்தில் 11மருத்துவ கல்லூரி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்கிற தன்னுடைய இரண்டு சாதனைகளை மட்டுமே முன்னிறுத்தி பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த இரண்டுமே கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே முன்வைத்து பேசப்பட்டது அப்படி இருந்து ஆட்சிப்பொறுப்பிற்கு வர முடியவில்லை. இது வாக்கு கேட்கப்போகிற வேட்பாளர்கள் பேசவேண்டிய கருத்துக்கள். தலைமை திமுகவை கடுமையாக எதிர்த்து போதைப்பொருள் புழக்கம், தேர்தல் பத்திரம் விவகாரம், தலைவிரித்தாடுகிற லஞ்சம் & ஊழல், சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதில்லை.மக்கள் மத்தியில் ஏற்கனவே 90 நாட்களில் முன்னாள் அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுப்பேன் என்ற ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் தான் நடுநிலையாளர்கள் இதை எதோ மறைமுக ஒப்பந்தம் என்று நினைக்கிறார்கள்.
* அதே போல் பாஜகவையும் கெஜ்ரிவால் கைது, தேர்தல் பத்திரம் விவகாரம், மாநில உரிமைகள், தமிழகத்திற்கான நிதிப்பங்கீடு, மத்திய அரசின் திட்டங்கள் சரிவர தமிழகத்திற்கு கிடைக்காமல் இருப்பது, மதவாதம், சாதியவாதம் போன்ற விசயங்களில் கடுமையான எதிர்ப்பு நிலையை எடுப்பதில்லை. மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு “டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்” என பெயர் மாற்றம் செய்ய முன்வைத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார் அதை கூட EPS கண்டித்து பேசவில்லை. அதனால் தான் இன்னும் பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
* கடுமையான திமுக எதிர்ப்பால் திமுக எதிர்ப்பு வாக்குகளை பெறவேண்டும். அதேபோல் கடுமையான பாஜக எதிர்ப்பால் பாஜக எதிர்ப்பு வாக்குகளையும் பெறவேண்டும். இந்த இரண்டையும் செய்யாமல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-க்கும், ஜெயலலிதா அம்மாவுக்கும், இரட்டை இலை சின்னத்திற்கும், அதிமுக என்கிற கட்சிக்கும் இருக்கிற வாக்கு வங்கி 25 சதவீதத்தை மட்டுமே குறிவைத்து தக்கவைத்துக்கொள்ள பார்க்கிறார் EPS. மேலும் பணபலம் மட்டுமே உள்ள கட்சிக்கு புதியவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தி வருகிற வாக்குகளை தனக்கான வாக்குகளாக காட்ட முற்படுகிற இந்த செயல் எந்த அளவுக்கு கைகொடுக்கும்?
* வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் மாறி மாறி வாக்களிப்பார்கள். திமுக மீது இருக்கும் அதிருப்தியால் அதிமுக தானாக ஆட்சிக்கு வந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கிடுகிறார். ஆனால் அந்த மாற்று சக்தியாக வளரும் முயற்சியில் இன்று பாஜக தீவிரமாக உள்ளது. இந்த சூழலில் வருகிற தேர்தலில் ஒரு நல்ல வெற்றியைப் பெற்று பாஜக வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால் மட்டும் தான் 2026-ல் அதிமுக ஆட்சி சாத்தியமாகும்.
* அதிமுக கட்சிக்குள் நடக்கிற உட்கட்சி பிரச்சனைகள் கட்சிக்குள் ஒற்றுமையில்லாதது மற்றும் ஒன்றுபட்ட அதிமுகவாக இல்லாதது பொதுமக்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களை அதிமுகவிற்கு வாக்களிக்க யோசிக்க வைக்கிறது. பாஜகவை விட்டு விலகியதில் தவறில்லை ஆனால் சில உறுதியான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும். அதே போல் பிரச்சார களத்தில் ஈடுகொடுக்கக்கூடிய அளவிற்கு EPS-ன் செயல்பாடுகளும் பேச்சுக்களும் இல்லை. அப்படி தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
* இன்னும் காலம் கடக்கவில்லை சில விஷயங்களை எடப்பாடி பழனிசாமி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இந்த தேர்தலில் கணிசமான வெற்றியை பெற்றால் தான் 2026 நமக்கான தேர்தலாக அமையும். அப்படி தவறினால் விளைவு எடப்பாடி பழனிசாமியின் தலைமை கேள்விக்குறியாகும்.