கரூர் வீட்டுக்கு வந்தாரா செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்.. சிசிடிவி காட்சியை அலசும் அமலாக்கத்துறை!
8 மாதங்களாக தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் கரூரில் உள்ள வீட்டிற்கு வந்து பெற்றோர்களை சந்தித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் சோதனை மேற்கொண்ட நிலையில் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவரது இதய குழாயில் நான்கு இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு அவருக்கு அடைப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 250 நாட்களாகவே புழல் சிறையில்தான் இருக்கிறார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜியின் ஜாஅதற்குக் காரணம் அவரது சகோதரர் அசோக்தான்.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகப் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் ஆஜராகாமலேயே இருந்தார். தனக்கு நெஞ்சு வலி இருந்ததாகத் தெரிவித்த அசோக் குமார், நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலமே அனைத்திற்கும் பதில் அளித்து வந்தார்.
அமலாக்கத்துறை சம்மன் அளித்த நிலையில், அவர் ஆஜர் ஆகாமல் வெளிநாட்டிற்கு தப்பிவிடும் வாய்ப்பு இருந்ததால், நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அசோக்குமார் குறித்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீடு மற்றும் அவரது அலுவலகத்திலும் அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அசோக் எங்கு இருக்கிறார்? என்பதை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அசோக் தலைமறைவாக இருப்பதினால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கும், தை பொங்கலுக்கும் கூட வீட்டிற்கு போக முடியாமல் புழல் சிறையிலேயே தவித்து வருகிறார் செந்தில் பாலாஜி.
கரூர் நாமக்கல் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் மனைவி பெயரில் உள்ள இடத்தில் அசோக்குமார் பல கோடி மதிப்பில் புதிய நவீன சொகுசு பங்களாவை கட்டி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு மே 26ஆம் தேதி வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதாரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது ராம் நகரில் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் சோதனை நடத்தினர். மேலும், அசோக்குமார் வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது தொடர்பாக இதுவரை அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் தலைமறைவாக உள்ளார்.
அசோக்குமார் எங்கே என்று 8 மாதங்களாக தேடி வரும் நிலையில் அவர், கரூர் வீட்டிற்கு வந்து செந்தில் பாலாஜியின் பெற்றோரை சந்தித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இன்றைய தினம் கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். 8 மாதங்களாக தலைமறைவாக உள்ள அசோக், கரூர் வீட்டிற்கு வந்து போனதாக தகவல் தெரியவந்ததை அடுத்து இன்றைய தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் ராமேஸ்வரப்பட்டி வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
செந்தில் பாலாஜி 8 மாதங்களாக புழல் சிறையில் இருக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே அசோக் தலைமறைவாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அசோக் கரூருக்கு வந்து போனதாக தகவல்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சென்றுள்ளது. இதன் அடிப்படையில்தான் இன்று மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர். அசோக் எங்கே? அவர் எதற்காக கரூருக்கு வந்து சென்றார் என்பதுதான் அமலாக்கத்துறை அதிகாரிகளின் தொடர் கேள்வியாக உள்ளது.