கலப்பு திருமணத்தால் பறிபோன இளம்பெண் உயிர்.. ஆணவ படுகொலை தடுக்க தனி சட்டம் வேண்டும்! வலுக்கும் குரல்!


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை செய்ப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆணவ படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்வவிடுதி கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெருமாள்,ரோஜா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா (19). அருகில் உள்ள பூவாளூரில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19), என்ற டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.

இருவரும் திருப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காதலித்து டிசம்பர் 31ல் திருப்பூரில் திருமணம் செய்து கொண்டு பல்லடத்தில் வசித்து வந்தனர். ஐஸ்வர்யா பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்த பல்லடம் காவல்துறை 18 வயது பூர்த்தி அடைந்துள்ள ஐஸ்வர்யாவின் விருப்பத்திற்கு மாறாகவும்,சட்ட விரோதமாகவும் ஜனவரி 2ம் தேதி வலுக்கட்டாயமாகப் தம்பதிகளைப் பிரித்து பெற்றோருடன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அடுத்த நாள் (03.01.2024) அதிகாலையில் அவசர அவசரமாக அவரது உடலை எரித்துள்ளனர். நவீன் அளித்த புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பெருமாள் மற்றும் ரோஜா கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நவீன் கூறுகையில்,

“நானும் ஐஸ்வரியாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இந்த காதலுக்கு ஐஸ்வரியா வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் நான் பட்டியல் சமூகம், ஐஸ்வரியா மாற்று சமூகம் என்பதுதான். ஆனால் நாங்கள் எங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். சமீபத்தில்தான் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டோம். இந்த விஷயம் எப்படியோ, ஐஸ்வரியாவின் வீட்டிற்கு கசிந்துவிட்டது.

எனவே வேறு வீடு மாறிவிட்டோம். இருப்பினும் அந்த வீட்டை கண்டுபிடித்து வந்த பல்லடம் போலீசார் ஐஸ்வரியாவை மட்டும் அழைத்து சென்றனர். என் மீது ஐஸ்வரியாவின் பெற்றோர் கடும் கோபத்துடன் இருப்பதாகவும், எனவே என்னை போலீஸ் ஸ்டேஷன் வரவேண்டாம் என்று அவர்கள் கூறினர். இருப்பினும் நான் பைக்கில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றேன். அங்கு, ஐஸ்வரியாவை அவரது தந்தை அவர அழைத்து சென்றுவிட்டார். பின்னர் நானும் வீடு திரும்பிவிட்டேன். ஆனால், அடுத்த நாள் காலை அவள் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு அரசுக்கு ‘ஆணவ படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் ‘ என கோரிக்கை வைத்திருக்கிறது. இது தொடர்பாக அமைப்பின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“சாதிய பாகுபாடு காரணமாகவே கொலை நடைபெற்றுள்ளதாலும்,இதனால் இணையரை இழந்தவர் பட்டியலினத்தவர் என்பதாலும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும்.

பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். உசிலம்பட்டி விமலாதேவி சாதி ஆணவப் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு எண் 26991 / 2014 என்ற வழக்கில் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் 13.04.2016 அன்று வழங்கியுள்ள தீர்ப்பில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்படவேண்டும் என்று அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் அதுவரை சாதி மறுப்புத் திருமண தம்பதிகளைப் பாதுகாப்புக்கு வழங்கிய வழிகாட்டுதல்களில் ஒன்றான ‘சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் எந்த காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுகிறார்களோ,அந்தக் காவல்நிலையமே தம்பதிகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பு’ என்பது பல்லடம் காவல்நிலைய ஆய்வாளரால் மீறப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும்.அதற்குரிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே இதே கோரிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on: