கலெக்‌ஷன் மோடில் ஆளுங்கட்சி… சைலன்ட் மோடில் எதிர்க்கட்சி… கொந்தளிக்கும் கோவை மக்கள்!


கோவை மாநகராட்சி தி.மு.க மேயர், கவுன்சிலர் உள்ளிட்ட அனைவரும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிவருகின்றனர். `தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து சென்னையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம் என்று குறிப்பிடத்தக்க திட்டங்களை நிறைவேற்றினாலும், இந்த இரண்டு ஆண்டுகளில் கோவைக்கு எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பணிகளும் மந்தமாக இருக்கின்றன’ என்ற புகார் எழுந்துவருகிறது. `இதையெல்லாம் தட்டிக் கேட்கவேண்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் சைலன்ட் மோடில் இருக்கிறார்கள்’ எனக் கொந்தளிக்கிறார்கள் கோவை பொதுமக்கள்.

இது குறித்து கோவை மூத்த வழக்கறிஞர் லோகநாதன் கூறுகையில், “சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கோவையும், கேரள மாநிலத்திலுள்ள கொச்சியும் ஒரே போன்ற நிலையில்தான் இருந்தன. இன்று அதன் வளர்ச்சி பிரமிக்கவைக்கிறது. இத்தனைக்கும் கோவைக்கும் கொச்சிக்கும் ஒரே நேரத்தில்தான் மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மெட்ரோ ரயில் வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு வந்து, அங்கு அடுத்து வாட்டர் மெட்ரோ திட்டத்தையும் நிறைவேற்றிவிட்டனர். அதேபோல திருவனந்தபுரத்துக்கு அடுத்து, மிகப்பெரிய விமான நிலையமாக கொச்சி ஏர்போர்ட் வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பலர் வெளிநாட்டுக்குச் செல்ல, சென்னை விமான நிலையத்துக்கு பதிலாக கொச்சியைத் தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த தொழில்துறை அதிகமுள்ள கோவையில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை.

நீண்டகாலமாகவே கோவைக்கு வலுவான அரசியல் தலைவர் இல்லை. இங்கு அதிகாரிகளின் ஆதிக்கம்தான் அதிகம். கோவையின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ரியல் எஸ்டேட் தொழிலைச் சார்ந்தவர்கள். முதலீடு, லாபம் என்ற நோக்கத்திலான வணிகத்தில் ஈடுபடுபவர்கள். இவர்களாலேயே கோவை விமான நிலைய விரிவாக்கப் பணி பல ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கிறது. இதில் மத்திய அரசின் பங்கும் இருக்கிறது. அங்குள்ள பாதுகாப்புத்துறை நிலத்துக்கு மாற்று இடம் வழங்குவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கோவை விமான நிலையமும் வளர்ச்சியடையவில்லை. பொதுவாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள்தான் எந்தச் சர்ச்சையிலும் சிக்கக் கூடாது என்று அமைதியாக இருப்பார்கள். ஆனால், எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளும் அமைதியாக இருப்பது கோவையில் மட்டும்தான்” என்றார்.

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வும், எம்.பி-யுமான கே.சி.பழனிச்சாமி கூறுகையில், “தமிழ்நாடு அரசின் வருவாயில் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், திட்டங்களில் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கோவையில் போக்குவரத்து நெருக்கடி பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மேற்கு புறவழிச்சாலைத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டனர். மேம்பாலப் பணிகளெல்லாம் முழுமையடையாமல் இருக்கின்றன. அவிநாசி – அத்திக்கடவு உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் பணிகள் முடங்கியிருக்கின்றன. மின்கட்டண உயர்வால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் கோவையின் அடையாளமும் மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஊடகங்களில் அவர்களின் வழக்கு தொடர்பான பிரேக்கிங் செய்திகளில்தான் பார்க்க முடிகிறது. தேர்தல் நேரத்தில், `ஆட்சிக்கு வந்தவுடன் முதல் ஆளாக வேலுமணியைக் கைது செய்வோம். சூயஸ் திட்டத்தை ரத்துசெய்வோம்’ என்றார்கள் தி.மு.க-வினர். ஆனால், இதுவரை எதையும் செய்யவில்லை” என்றார்.

கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ (அ.தி.மு.க) அம்மன் அர்ச்சுனன் கூறுகையில், “தி.மு.க அரசு புதிய திட்டங்களைக் கொண்டுவரவில்லை என்பதுடன், நாங்கள் கொண்டுவந்த திட்டங்களையும் முடக்கிவிட்டது. எப்படி கலெக்‌ஷன் செய்யலாம் என்றுதான் யோசிக்கின்றனர். மெட்ரோ ரயில் திட்டத்தின் டி.பி.ஆருக்கு எங்கள் ஆட்சியிலேயே நிதி ஒதுக்கிவிட்டோம். இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. கோவை சார்ந்து சட்டசபையில் வைக்கும் கோரிக்கைகளுக்கும் பதில் இல்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. தங்களுக்கு வாக்களிக்காத மக்களும் பொறாமைப்படும் அளவுக்குச் செயல்படுவோம் என முதல்வர் கூறினார். இப்போது வாக்களித்தவர்கள்கூட, `ஏன் வாக்களித்தோம்?’ என்று யோசிக்கின்றனர். நாங்கள் மக்களுக்காகப் போராட எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இது குறித்து கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமியிடம் விளக்கம் கேட்டோம். “கோவையை நாங்கள் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. சில திட்டங்களின் பணிகள் அ.தி.மு.க ஆட்சியிலேயே மந்தமாகின. காத்திருப்பிலுள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திவருகிறோம். விரைவில் மேற்கு புறவழிச்சாலை திட்டப் பணிகள் தொடங்கவிருக்கின்றன. இதேபோல அடுத்தடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்படும். முதல்வர் என்னை பொறுப்பு அமைச்சராக நியமித்தபோது கட்சிப் பணிகளைவிட, பொது வேலைகள் பற்றித்தான் அதிகம் சொன்னார். கோவை வளர்ச்சிக்காக எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

வாக்களிக்காத மக்கள் பொறாமைப்படுகிறார்களோ இல்லையோ… பொறுமையிழக்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம் முதல்வரே?
Share on: