கள்ளச்சாராயத்தில் டர்பன்டைனும் கலப்பு? கள்ளக்குறிச்சிக்கு மெத்தனால் வந்தது எப்படி? பெரிய நெட்வொர்க்!


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கில் மெத்தனால் வாங்க உதவியதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த இரு வியாபாரிகள் உள்பட மூவரை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் வரை பலியாகிவிட்டனர். இன்னும் சிலர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து விசாரணை அலுவலரான கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான தனிப்படை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாக கண்ணுக்குடி என்கிற கோவிந்தராஜ், அவரது விஜயா, சகோதரர் தாமோதரன், அவருடைய மனைவி சந்திரா, முக்கிய எதிரியான மாதேஷ், சேஷசமுத்திரத்தைச் சேர்ந்த சின்னத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அது போல் மெத்தனால் விற்பனையில் தொடர்புடையதாக சங்கராபுரம் வட்டம் விரியூர் ஜோசப் ராஜா, ராமர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார், கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், தம்பிபேட்டையைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மாதேஷுக்கு மெத்தனால் வாங்க ஜிஎஸ்டி ரசீது அளித்து உதவியதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சிப்ஸ் கடை நடத்தி வந்த சக்திவேல், மீன் வியாபாரம் செய்து வந்த கண்ணன், வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டம், கருமந்துறை கல்லாநத்தத்தைச் சேர்ந்த சங்கர் ஆகிய மூவரை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அது போல் இன்று அய்யாசாமி, தெய்வாரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் சேர்த்து கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு சென்னை, மதுரவாயலைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மெத்தனால் விநியோகித்தது தெரியவந்தது.

எம்ஜிஆர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் சிவக்குமார் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின்பேரில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று அவரைக் கைது செய்து சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் புழலை அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் சிவக்குமார் பணியாற்றி வந்தாராம்.

கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு அவர் மெத்தனால், டர்பன்டைன் எண்ணெய் ஆகியவற்றை விநியோகம் செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக அந்த ரசாயன தொழிற்சாலை உரிமையாளரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Share on: