கள்ளச்சாராய விற்பனையை தடுக்க என்ன செய்தீர்கள்? பலிக்கு யார் பொறுப்பு? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி.


கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 35 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுவிலக்கு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பாக்கெட்டில் சாராய விற்பனை தமிழகத்தின் பல பகுதிகளில் படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இப்படி இருக்கையில்தான் கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் குடித்த 50 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடி ஆக்ஷனில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை ஷ்ரவண் குமார் ஜடாவத்தை பணியிடமாற்றம் செய்தும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவையே கூண்டோடு சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடியிடமிருந்து சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.செல்வம், “தமிழ்நாடு அரசின் மொத்த துறையும் தோல்வி அடைந்துள்ளது. பலி எண்ணிக்கை 100 தொட வாய்ப்புள்ளது. கருணாபுரத்தில் உள்ள 500 பேரில் 300 பேர் விஷச்சாராயம் அருந்தியுள்ளனர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பணம் பெற்றுக்கொண்டு விஷச்சாராய விற்பனையை அனுமதித்துள்ளனர். சட்டவிரோத விற்பனை குறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றுவதில் பலனில்லை” என வாதத்தை முன்வைத்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், “விஷச்சாராய விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? 2023ம் ஆண்டு விஷச்சாராய பலி ஏற்பட்டதை அடுத்து விஷச்சாராயத்தை ஒழிக்க கடந்த ஓராண்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய விற்பனை தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

இதற்கு முன்பும் விஷச்சாராய மரணம் நிகழ்ந்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? விஷச்சாராய விற்பனை தொடர்பாக கவனத்திற்கும் கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. இதற்கு யார் பொறுப்பு?” என தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பி.எஸ். ராமன், “பொதுநல வழக்கு என்றுக்கூறி அரசியல் உள்நோக்கத்துடன் வாதம் முன்வைக்கப்பட்டது. மனுதாரர் கட்சி ஆட்சியில் இருந்த போது 2001ம் ஆண்டு புதுப்பேட்டையில் விஷச்சாராய மரணம் நிகழ்ந்தது. கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி 47 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 89 பேர் உடல் நிலை சீராக உள்ளது. கூடுதல் மருத்துவக்குழு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். மது விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கைகள் தொடரும். அவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் பாயும்.

விஷச்சாராய மரணங்களை தடுப்பது தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 161 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருக்கின்றனர். அதேபோல விழுப்புரம், மரக்காணம் சம்பவங்களுக்கு பிறகு விஷச்சாரய விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Share on: