கஷ்டப்பட்டு விளைய வைத்த நெல்.. தார்ப்பாய் கூட போடாமல் அலட்சியம்.. மழையால் 5000 மூட்டைகள் சேதம்!


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 5,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜபுரத்தில் மதுரமங்கலம், சிவன்கூடல், மேல்மதுர மங்கலம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.

அப்பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 5,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. ராமானுஜபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளை பாதுகாக்க தார்ப்பாய் வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை முறையாக தார்ப்பாய் கொண்டு மூடப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு நெல்லை விளைவித்து, தாங்கள் அரசிடம் கொடுத்த நிலையில் மழைக்காலம் என்றாலே நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவது தொடர்கதையாகி வருவதாகவும், இதனால் அரசுக்கு பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Share on: