கிளாம்பாக்கத்தில் என்ன நடக்கிறது.. அடியோடு சரிந்த அரசு பஸ் பயணிகள் எண்ணிக்கை.. கொதிப்பில் டிரைவர்கள்


சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நேற்று அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் திடீரென ஆவேசத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர பஸ் நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நிற்கும் நடைமேடைக்கு செல்லும் வழி மூடப்பட்டதால் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. முழு பின்னணி குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

சென்னை கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து தான் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், வடக்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விமான நிலையத்திற்கு நிகரான வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள், அரசு போக்குவரத்து கழக பஸ்கள் , ஆம்னி பேருந்துகள் மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தை தனியார் நிறுவனம் தான் முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்கிறது.

இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நிற்கும் நடைமேடை எண்கள் 1, 2 இடத்துக்கு செல்லும் வழியை பராமரிப்பு பணிகள் என்று காரணம் காட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தினர் திடீரென அண்மையில் மூடி வைத்தார்கள். இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் நேராக ஆம்னி பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக வெகுவாக குறைந்துவிட்டது.

அதேபோல் மாநகர பஸ் நிலையத்தில், பயணிகளுக்காக இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள் மாநகர பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகளை இறக்கி விட்டிருக்கிறார்கள். இதன் காரணமாகவும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் உரிய நேரத்திற்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனம்தான் என்று கூறி நேற்று திடீரென பேருந்து நிலைய வளாகத்திற்குள் அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் தரையில் அமர்ந்து ஆவேசத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது டிரைவர்கள், கண்டக்டர்கள் போலீசாரிடம் கூறும் போது, “சென்னை மாநகர டவுன் நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நிற்கும் நடைமேடைக்கு செல்லும் வழி பராமரிப்பு என்ற பெயரில் மூடப்பட்டிருக்கிறது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும், மாநகர பஸ்சிலிருந்து இயக்கப்படும் பேட்டரி வண்டிகளை ஆம்னி பஸ் நிலையத்திற்கு சென்று பயணிகளை இறக்கி விடக்கூடாது என கோரிக்கை வைத்தனர். இதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உங்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் கலைந்து சென்றனர். திடீர் போராட்டத்தால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Share on: