‛‛குட்கா விற்று கைதானவரின் மனைவி தானே நீ’’.. தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியை திட்டிய கவுன்சிலர்


தென்காசி: ‛‛குட்கா விற்று கைதானவரின் மனைவி தானே நீ” என்று திமுகவை சேர்ந்த தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியை பார்த்து பெண் கவுன்சிலர் கேள்வியெழுப்பி வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளில் திமுக, 3 வார்டுகளில் காங்கிரஸ், ஒரு வார்டில் மதிமுகவினர் வெற்றி பெற்றனர். இதன்மூலம் மாவட்ட பஞ்சாயத்து திமுக வசமானது.

திமுகவை சேர்ந்த தமிழ் செல்வி மற்றும் கனிமொழி ஆகியோர் இடையே மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடிப்பதில் போட்டி ஏற்பட்டது. இதில் தமிழ்செல்வி 8 வாக்குகள் பெற்று வென்றார். கனிமொழி தோற்றுப்போனார். இதையடுத்து தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக தமிழ் செல்வி உள்ளார்.

இந்நிலையில் தான் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ் செல்வி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தின்போது கவுன்சிலர் கனிமொழி, அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் சரியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். இந்த வேளையில் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தின்போது கவுன்சிலர் கனிமொழி, ‛‛பாகுபாடு காட்டக்கூடாது. மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக (தமிழ் செல்வி) இருப்பவரின் கணவர் குட்கா விற்று கைது செய்யப்பட்டவர். நீங்களும் இங்கே குட்கா விற்கவா வந்து இருக்கீங்க. கணவர் கைதுக்கு பொறுப்பேற்று தலைவி பதவியில் இருந்து விலக வேண்டும்” என்று கூறினார். இதனால் தலைவி தமிழ் செல்வி தனது இருக்கையில் இருந்து எழுந்தார்.

இந்த வேளையில் பூங்கோதை என்ற கவுன்சிலர் எழுந்து கனிமொழியிடம் தலைவி தமிழ் செல்விக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்தார். ‛‛கட்சியை பற்றி நினைக்காமல் இப்படி பொதுவெளியில் விமர்சிக்கலாமா?” என்று பூங்கோதை கேட்டார். அதற்கு கனிமொழி, ‛‛நீ சும்மா இரு” என்று ஆக்ரோஷமாக கூறினார். இதையடுத்து தலைவி தமிழ் செல்வி கூட்டத்தை புறக்கணித்து எழுந்து சென்றார். தலைவி தமிழ் செல்வி, கனிமொழி இடையே ஏற்கனவே தலைவர் பதவியை கைப்பற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டது.

இதற்கிடையே தான் சமீபத்தில் தமிழ் செல்வியின் கணவரான, திமுகவை சேர்ந்த ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் பெங்களூரில் இருந்து 600 கிலோ குட்கா கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தான் கவுன்சிலர் கனிமொழி, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வியை அப்படி கூறி விமர்சனம் செய்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
Share on: