குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!


குற்றாலம் மலைப் பகுதியில் கன மழை. அருவிகளில் வெள்ளப்பெருக்கு. பழைய குற்றால அருவி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நான்கு பேர் மீட்பு :அரை கிலோ மீட்டர் தூரத்தில் சிறுவனின் சடலம் மீட்பு.

குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இழுத்துச் சொல்லப்பட்ட ஐந்து பேரில் 4 பேர் மீட்கப்பட்டனர். சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை மற்றும் மிகவும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் சிறிதளவும் , பழைய குற்றால அருவியில் அதைவிட அதிகமாகவும் தண்ணீர் விழுந்தது. மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஓரமாக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் தலையை நனைத்துச் சென்றனர்.

ஆனால் பழையகுற்றால அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலத்தில் குவிந்தனர். வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து ஆனந்தமாய்க் குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் இன்று, குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் பழைய குற்றால அருவி, மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

பிற்பகல் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட தீடீர் வெள்ள பெருக்கினால் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திக் கொண்டு வெள்ளம் பாய்ந்து வந்தது. சிறிது நேரத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது.

வெள்ளப்பெருக்கில் ஐந்து பேர் சிக்கினார். இது குறித்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிஷோர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் விரைந்து சென்றனர்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இவர்களுக்கு ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி. சுடலையாண்டி, ஊராட்சி மன்ற செயலாளர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் ஆயிரப்பேரி ஊர் பொதுமக்கள் உதவி புரிந்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) என்ற சிறுவன் காணாமல் போனார். அவரைத் தேடும் பணி தீவிரமடைந்ததது. இந்த நிலையில், இச்சிறுவன் அரை கிலோ மீட்டர் தூரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அவரது குடும்பத்தாரையும் அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் வேறு யாரேனும் வெள்ளத்தில் சிக்கினார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் பழைய குற்றாலத்தில் முகாமிட்டு மீட்பு பணியை பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் சிக்கிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Share on: