குவைத் தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி! குடும்ப நலனுக்காக வெளிநாடு சென்ற நிலையில் சோகம்.


குவைத் தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரின் நிலை என்ன என தெரியாமல் இருந்த நிலையில் அந்த 3 பேர் உள்பட 7 பேர் பலியாகிவிட்டனர்.

குவைத் தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட தமிழர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிப்பின் நிலை என்னவென தெரியாமல் அவருடைய குடும்பத்தினர் கவலையில் உள்ள நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தின் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பு கேரளாவை சேர்ந்த என்பிடிசி குழுமத்திற்கு சொந்தமானது. இதன் உரிமையாளர் கே.ஜி. ஆபிரகாம்.

இந்தியாவில் இருந்து குவைத் மங்காப் நகருக்கு வேலை தேடி செல்லும் தொழிலாளர்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இதில் தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது.

இந்த விபத்தில் சிக்கி இந்தியர்கள் 43 பேர் வரை பலியாகி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. குவைத் தீவிபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று காலை குவைத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கே.வி. சிங் சென்றுள்ளார்.

பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. இதனால் டிஎன்ஏ சோதனை மேற்கொண்டால் மட்டுமே உடல்கள் எல்லாம் யாருடையது என தெரியவரும். இந்த தீவிபத்தில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்கள் இறந்திருக்கலாம் என தெரிகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் மொத்தம் 3 பேர் பலியாகிவிட்டனர்.

இந்த நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு, தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரும் இறந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 5 பேராவது இறந்திருப்பர் என குவைத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடலூரை சேர்ந்த சின்னதுரை, பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர்டு, செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிப்பின் நிலை என்னவென தெரியாமல் அவருடைய குடும்பத்தினர் கடுமையான மனவேதனையில் கண்ணீருடன் காத்திருந்தனர். இந்த நிலையில் குவைத் தீவிபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுடைய உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வீராசாமி மாரியப்பன், முகமது ஷரீப், ரிச்சர்ட் ராய், சிவசங்கர், சின்னதுரை, கருப்பண்ணன் ராமு, ராஜு எபினேசர் ஆகிய 7 தமிழர்கள் உயிரிழந்தனர்.
Share on: