கூலிப்படையை வைத்து மிரட்டிய முன்னாள் தாசில்தார்.. போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!
நில அபகரிப்புக்கு, உடந்தையாக இருந்ததாக அளித்த புகாரை திரும்பப் பெறும்படி மிரட்டல் விடுத்ததாக திருப்பத்தூர் முன்னாள் தாசில்தாருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஜோலார்பேட்டை போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி அருகே உள்ள அதனவூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவில், கோவிந்தராஜ் என்பவரின் பெயரை சேர்த்து அப்போதைய திருப்பத்தூர் தாசில்தாராக இருந்த சிவபிரகாசம் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தாசில்தாருக்கு எதிராக அளித்த புகாரை விசாரித்து 12 வாரங்களில் சட்ட விதிக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு இந்த வழக்கை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், புகாரை திரும்பப் பெறும்படி கூலிப்படையினரை வைத்து தன்னை மிரட்டி வருவதாகவும், இதுசம்பந்தமாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தும், தாசில்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், தனது புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குமரேசன் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தாசில்தார் சிவபிரகாசம் மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீதான விசாரணை நிலை அறிக்கையை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.