கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷின் தந்தையிடம் சிபிசிஐடி விசாரணை.. பரபரப்பை கிளப்பும் வழக்கு!


கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், தற்கொலை செய்துகொண்ட கோடநாடு எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தினேஷின் செல்போன் குறித்து அவரது தந்தையிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்ததாக தெரிகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இரவு காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் சில பொருட்கள் கொள்ளை போயின. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அடுத்த சில நாட்களில் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது விபத்து அல்ல, கொலை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்த மரணங்கள் கோடநாடு வழக்கில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தின.

பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்திற்கும் தினேஷின் தற்கொலைக்கும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். தினேஷ் தற்கொலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை 500க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேக வளையத்தில் இருப்பவர்களின் செல்போன் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முன்பு விசாரணையின்போது தினேஷின் செல்போனை பறிமுதல் செய்யாமல் அதில் நடந்த தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்களை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட கணினி ஆபரேட்டர் தினேஷின் செல்போன் குறித்து அவரது தந்தையிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான சிபிசிஐடி போலீசார், கோத்தகிரி அருகே உள்ள தினேஷ் வீட்டுக்குச் சென்று அவரது தந்தையிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தினேஷின் தந்தை போஜனிடம், தினேஷ் பயன்படுத்திய செல்போன் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவரது தந்தை, தினேஷின் செல்போன் குறித்து எதுவும் தெரியாது என்றும் தினேஷ் இறந்து 7 ஆண்டுகள் ஆவதால் செல்போன் பற்றி எந்த விபரமும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 2 மணி நேரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Share on: