கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவரிடம் மத்தியப் பிரதேச இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் கழுத்து எழும்பு முறிக்கப்பட்டுள்ளது. அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் உள்ளன.
மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவருக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் பார்க்கிங்கில் இருந்த தன் வாகனத்தை எடுக்க நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு திடீரென வந்த இளைஞர் ஒருவர் தன் பேன்டை அகற்றிவிட்டு நின்றுள்ளார். மேலும், அரைகுறை ஆடையுடன் பெண் மருத்துவரை நோக்கி கையை நீட்டியுள்ளார். இதைப் பார்த்து அச்சமடைந்த பெண் மருத்துவர் சத்தம்போட்டுள்ளார். மருத்துவரின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்த பாதுகாவலர்கள் விரைந்து வந்துள்ளனர். பாதுகாவலர்களைக் கண்ட அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, பயிற்சி மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண் மருத்துவரிடம் அநாகரீகமாக நடக்க முயற்சித்த அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர். இந்நிலையில், அந்த இளைஞர் நேற்று காலை மருத்துவமனை வளாகத்துக்குள் மீண்டும் நடமாடியுள்ளார். இதைப் பார்த்த பாதுகாவலர்கள் அந்த இளைஞரைப் பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அந்த நபர் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த மயங்க் டல்லார் (25) என்பது தெரியவந்துள்ளது. போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆயிரக்கணக்கானோரின் நடமாட்டம் இருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.