கொல்கத்தா மருத்துவர் கொலை! நாடு தழுவிய ஸ்டிரைக்.. தமிழகத்திலும் மருத்துவர்கள் போராட்டம் தொடங்கியது.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறியுள்ளனர். இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டது.
இந்த கொலை அதிகாலையில் 3-6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடந்திருக்கிறது. இந்த நேரத்தில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பரிசோதிக்கையில், ப்ளூடூத் இயர்ஃபோனுடன் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். ஆனால் திரும்ப வெளியே செல்லும்போது அவர் காதுகளில் ப்ளூடூத் இயர்ஃபோன் இல்லை. அது மருத்துவரின் சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் கைது செய்தனர்.
இருப்பினும் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறி மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதேநேரம் இந்த வழக்கு நியமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று, உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவரின் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்காக நீதி கேட்டும் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராடி வருகின்றனர். கடந்த 7 நாட்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தின் மருத்துவத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த பணியிலும் ஈடுபடமாட்டோம் என்று மருத்துவர்கள் ஸ்டிரைக் செய்தனர். போராட்டம் காரணமாக இதுவரை நோயாளிகளில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இப்படி இருக்கையில் கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக மருத்துவர்கள் அறிவித்திருந்தனர். இந்திய மருத்துவர்கள் சங்கம் இது குறித்து கூறுகையில், “கொல்கத்தாவில் பெண் மருத்துவரின் கொலையை கண்டித்து, இன்று காலை 6 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை நாடு முழுவதும் மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.
இதில், அவசர சிகிச்சை மட்டும் வழக்கம்போல செயல்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இன்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி வளாகத்தில் இந்திய மருத்துவச் சங்கமும் (IMA) தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கமும்(TNGDA) இணைந்து இன்று காலை கண்டன ஆர்பாட்டத்தை நடத்துகின்றன. அதேபோல அரசு மருத்துவமனைகளில் காலை 7.30-8.30 என ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்திலும் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அடையாள போராட்டத்தை நடத்துகின்றனர்.
சென்னை தவிர கோவை, மதுரை, நெல்லை என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒருநாள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மிக அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், உள்நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறியுள்ளனர்.