கோமலவள்ளி டூ அம்மா.. MGR கொடுத்த வாள்; ஜெயலலிதா சிங்கமான கதை!


எம்ஜிஆரை சந்தித்தது ஜெயலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கான விதையாக அமைந்தது. எம்ஜிஆர் தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார்.

பிறப்புசந்தியா – ஜெயராம் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக 1948 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ந்தேதி மைசூரில் பிறந்தார் ஜெயலலிதா. இவரது இயற்பெயர் கோமலவள்ளி. இவரை குடும்பத்தினர் அம்மு என செல்லமாக அழைத்தனர்.ஜெயலலிதாவிற்கு ஒரு வயது ஆன போது அவரது தந்தை ஜெயராம் மறைந்தார். இதற்கிடையில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவிற்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. கற்கோட்டை என்ற படத்தின் மூலம் திரை உலகில் கால் பதித்தார். அப்போது சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் அம்முவும் அவரது சகோதரரும் சேர்க்கப்பட்டனர். ஆனால் குழந்தைகளை சரியாக கவனிக்க முடியாத தாய் சந்தியா அவரை பெங்களூருவில் பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதையடுதது பிஷப் கார்ட்டன்ஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார். மீண்டும் சென்னைகே அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா சர்ச் பார்க் கான்வென்டில் சேர்க்கப்பட்டார்.

1963ல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் இளம் வயதில் கல்லூரி விரிவுரையாளராக விரும்பினார். ஆனால் காலம் அவரை சினிமா, அரசியல் என்று கை பிடித்து அழைத்து வந்து விட்டது. சினிமா நாடகத்துறையில் பிஸியாக இருந்த ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பனின் முன்னிலையில் நடந்த நாட்டிய நிகழச்சி ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு வித்திட்டது.

எம்ஜிஆரை சந்தித்தது ஜெயலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கான விதையாக அமைந்தது. எம்ஜிஆர் தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார். 1986ல் மதுரை மாநாட்டில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோலை ஜெயலலிதா எம்ஜிஆருக்கு கொடுத்தார். அதை ஜெயலலிதாவிற்கே எம்ஜிஆர் திருப்பி கொடுத்தார்.

இதற்கிடையில் 1987 டிசம்பர் 24ந்தேதி எம்ஜிஆரின் மறைவிற்கு பின் ஜானகி முதல்வரானார். ஆனால் வெறும் 24 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதிமுக ஜா, ஜெ என இரு அணிகளாக பிரிந்து அடுத்து வந்த 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்தித்தன. இதில் ஜெ. அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. ஜானகி அணி ஒரு இடத்தை பெற்று படுதோல்வி அடைந்தது.

ஜெ அணியினர் 21.15 சதவிதம் வாக்குகள் பெற்றனர். இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் முதல் எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.1989 பிப்ரவரி மாதம் அதிமுகவின் இரு பிரிவுகளும் ஜெயலலிதா தலைமையில் இணைந்தது. பின் 1991ல் ஜெயலிலிதா தலைமையில் போட்டியிட்ட அதிமுக 168 தொகுதிகளில் போட்டியிட்டு 164 இடங்களில் வென்றது. ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். 1996ம் ஆண்டு தேர்தலில் போலி எண்கவுண்டர், வளர்ப்பு மகன் திருமணம் உள்ளிட்ட பல காரணங்களால் படு தோல்வியை தழுவினார்.

மீண்டும் 2001ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் ஆனார். டான்சி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால் தகுதியிழப்பில் அவர் முதல் பதவியை இழக்க நேரிட்டது.இதையடுத்து 2006 சட்டமன்றதேர்தலில் மதிமுக, விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெறும் 69 இடங்கள்தான் கிடைத்தது. பின்னர் 2009ல் நடந்த மக்களவை தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்வியே கிடைத்தது.ஆனால் 2011ம் ஆண்டு 150 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்தார். பின்னர் 2016 ம்ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் பதவியை அலங்கரித்தார்.

இந்நிலையில் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ந்தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவால்,சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.75 நாட்கள் சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறிவந்ததாகக் கூறப்பட்ட நிலையில் திடீர் மாரடைப்பால் டிசம்பர் மாதம் 5-ம் தேதி நள்ளிரவு 11.30 மணியளவில் இறந்தார்.பல்வேறு மக்கள் நல திட்டங்களால் தமிழக மக்களுக்கு மிகவும் நெருக்கம் ஆனார். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதி உதவி திட்டம், மாணவர்களுக்கு இலவச சைக்கிள், அம்மா உணவகம் என தமிழகம் தலை நிமிர ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். இதனால் அதிமுகவினர் மட்டும் இன்றி அனைத்து தரப்பினராலும் அம்மா என்று அழைக்கப்பட்டார் என்றால் மிகையல்ல.
Share on: