கோவை ஆயுள் தண்டனை கைதி கண்டுபிடித்த சோலார் ஆட்டோ.. ஒரு மணி நேரம் சார்ஜ் போட்டால் 80 கிமீ பயணிக்கலாம்
கோவை மத்திய சிறையில், சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் ஆட்டோவை தண்டனைக் கைதி யுக ஆதித்தன் என்பவர் உருவாக்கியுள்ளார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்துள்ள யுக ஆதித்தன், சிறையில் தள்ளிவிட்டார்களே, இனி அவ்வளவுதான் வாழ்க்கை என்று நினைக்காமல் தனது திறமையை வெளிப்படுத்தி புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த மின்வெட்டுவாபாளையத்தை சேர்ந்த 35 வயதாகும் யுக ஆதித்தன் என்பவர், ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்திருக்கிறார். இதன் மூலம் நல்ல வேலையில் இருந்த யுக ஆதித்தனின் வாழ்க்கை காதல் காரணமாக மோசமாக மாறியது. காதலி செய்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அவர், வேறுஒருவர் மூலம் பணம் கொடுத்து காதலியை தீர்த்து கட்ட ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த நபர் அவரின் காதலிக்கு பதிலாக உறவினர் ஒருவரை கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு நடந்தது. போலீசார் யுக ஆதித்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து யுக ஆதித்தன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த போதிலும் முடங்கவில்லை,.. சிறையில் இருந்தபடியே திறமையை வெளிப்படுத்தி அவர் சாதிக்க தொடங்கினார். சிறை வளாகத்தில் உள்ள மத்திய தொழிற்கூடத்தில் யுக ஆதித்தனுக்கு வேலை கொடுத்தனர். அவர் குறைந்த செலவில் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய சோலார்(சூரிய ஒளி சக்தியில் இயங்க கூடியது) ஆட்டோவை தயாரித்து சாதனை படைத்திருக்கிறார். சிறை நிர்வாகம் கொடுத்து ஊக்கத்தால் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இது குறித்து கோவை மத்திய சிறை காவல் செந்தில்குமார் கூறும் போது, யுக ஆதித்தன் சோலார் ஆட்டோ ஒன்றை தயாரித்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை ஆகும். இந்த ஆட்டோவில் 7 பேர் சாதாரணமாக செல்லலாம். இந்த ஆட்டோவின் மேற்பகுதியில் 6 அடி நீளம், 4 அடி அகலத்தில் சோலார் பேனல் (சூரிய ஒளி தகடு) பொருத்தப்பட்டிருக்கிறது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை சேமிக்க ஆட்டோவில் 1,500 வாட்ஸ் அளவு கொண்ட பேட்டரியும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்டோவை சூரிய ஒளியில் ஒரு மணி நேரம் நிறுத்தி வைத்தாலே போதும். ஆட்டோவில் இருக்கும், அந்த பேட்டரி சார்ஜ் ஏறி விடும்.
இப்படி ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 70 கி.மீ. முதல் 80 கி.மீ. தூரம் செல்லலாம். அதிகபட்சமாக 40 கி.மீ. வேகத்தில் இந்த ஆட்டோவில் செல்ல முடியும். இந்த ஆட்டோவை தயாரிக்க செலவு மிகவும் குறைவாகவே ஆனது. சாதாரண ஆட்டோ வாங்கவே ரூ.3 லட்சத்துக்கும் மேல் ஆகும் என்கிற சூழலில் வெறும் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலவில் சோலார் ஆட்டோவை தயாரித்து முடித்தார். அதற்கான சோதனை ஓட்டம் நடந்து முடிந்துவிட்டது. இந்த ஆட்டோவை சிறைத்துறை டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். இதனை தற்போது சிறை வளாகத்தில் இயக்கும்படி உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இதுபோன்ற ஆட்டோக்களை இயக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக சோலார் ஆட்டோக்களை தயாரித்துக்கொடுக்கும்படி நாங்கள் யுக ஆதித்தனை கேட்டிருக்கிறோம்.
இந்த சோலார் ஆட்டோவை கோவை மத்திய சிறை வளாகத்தில், சிறை மெயின் கேட் வரை இயக்கி வருகிறோம். சிறையில் கைதிகளை பார்க்க வரும் முதியவர்களை மெயின்ரோட்டில் இருந்து உள்ளே ஏற்றி வருவதற்கும், பொருட்களை ஏற்றி வருவதற்கும், அவசர தேவைக்காகவும், சிறைக்குள் ரோந்து செல்லவும் இதை பயன்படுத்த ஆலோசித்து வருகிறோம். சோலார் ஆட்டோ, சிறைத்துறைக்குள் மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகள் அனுமதி கொடுத்ததும், வெளியே விற்பனை செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். அதற்கான அனுமதி கிடைத்ததும், காப்புரிமை பெற்று, வெளியே விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.