கோவை, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீயை அணைக்க போனவர்களுக்கு காபி, டீ, செலவு மட்டும் ரூ.27.51 லட்சமாம்
கோவை மாவட்டம், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க ஏற்பட்ட செலவினங்கள் குறித்து மாநகராட்சியில் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த கணக்கை பார்ப்பவர்களுக்கு தூக்கி வாரிப்போடும் என்பது நிச்சயம்.
கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகளும் இப்பகுதியில் கொட்டி தரம் பிரிக்கப்படும். இங்கு அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில், அடிக்கடி இப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதும் வழக்கம். இதனால், குப்பைக் கிடங்கில் தீயை அணைக்கும் பணிக்காக இங்கு நிரந்தரமாகவே தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குப்பை கிடங்கு பகுதியில் உள்ள உரம் தயாரிக்கும் இடத்தின் அருகில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து 17ம் தேதி வரை நீடித்தது. கட்டுக்கடங்காத தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானப் படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், காவல் துறை, மருத்துவக் குழு, அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டனர்.
குப்பைகளை அகற்றுவதற்கான ஜேசிபி, ஜெட்லிங் மெஷின் உள்ளிட்ட வாகனங்களுக்கு டீசல், பெட்ரோல், கிரீஸ் ஆயில் ஆகியவற்றுக்கான செலவினம் மற்றும் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு சாப்பாடு, டீ, காபி உள்ளிட்டவை ஆகியவை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன.
அந்த வகையில், உணவு, டீ, காபி, குளிர்பானங்கள், பழங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் 27,51,678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும், டீசல் பெட்ரோல், கீரிஸ் ஆயில் 18,29,731 ரூபாயும், காலணிகள் 52,348 ரூபாயும், முகக்கவசம் 1,82,900 ரூபாயும், பொக்லைன், லாரி வாடகை 23,48,661 ரூபாயும், தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி, தனியார் வாகனம்) 5,05,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.