சடசடவென சரிந்து விழுந்த தேர்.. அடியில் சிக்கிய 6 பேரின் நிலை என்ன? அலங்கார பணியின்போது விபரீதம்!


புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி நடந்தது. இந்த வேளையில் திடீரென்று தேர் சரிந்து விழுந்தபோது அடியில் 6 பேர் சிக்கினர். இதில் முதியவர் பரிதாபமாக பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ராமசாமிபுரம் உள்ளது. இங்கு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடக்கும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

தேர் திருவிழாவின்போது அறந்தாங்கியை சுற்றிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் தான் தேர் திருவிழாவையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி நடந்தது.

நேற்றைய தினம் தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கிராம மக்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த வேளையில் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் தேர் சரிந்து விழுந்தது. இதில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டு இருந்தவர்கள் தேரின் அடியில் சிக்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் தேரை அகற்றி அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

அப்போது ராமசாமிபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 70) என்பவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்தனர். அப்போது மகாலிங்கம் என்பவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

இதையடுத்து மற்ற 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அலங்கார பணியின்போது தேர் சரிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக தேர் மற்றும் தேரோட்டத்தின்போது பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அப்போது தேருக்கான வடம் அறுந்தது. அந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பக்தர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதோடு அபசகுணம் ஏற்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on: