
1.) “மக்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே விடியல் ஆட்சியின் சாட்சி” என முதல்வர் கூறுவதை கேட்டால் “துன்பம் வரும் வேளையில் சிரி” என்று கூறும் வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது.
“விடியலின் அடையாளம் எது தெரியுமா நான் செல்கிற இடமெல்லாம் கூடுகிற மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி தான்.” எனக்கூறுகிறார் முதல்வர். ஆனால் அவர் செல்லுகிற இடமெல்லாம் மக்கள் தானாக கூடுவதில்லை. திமுகவினர் பணம் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்கள், அதனால் ஏற்படுகிற மகிழ்ச்சி தான் என்பது முதல்வருக்கு எப்பொழுது தெரிய போகிறது.
2.) “பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி” என்றீர்களே அலங்கோல ஆட்சிக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி என்று எடுத்துக் கொள்ளலாமா?
“மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்திற்கு ஸ்டாலின் பஸ் என்றே பெயர் வைத்துவிட்டார்கள்” என்று கூறுகிறீர்கள். அதேபோல் ஸ்டாலின் டாஸ்மாக் பட்டி தொட்டி எங்கும் பரவி இருக்கிறதே, ஸ்டாலின் ஆட்சியில் கஞ்சா, குட்கா, Cool Lip போன்ற போதைப் பொருட்களின் புழக்கம் தமிழகம் முழுவதும் சர்வ சாதாரணமாக உள்ளது பள்ளிகள் வரை பரவியுள்ளது. அதை தடுக்க வேண்டியது ஸ்டாலின் நிர்வகிக்கிற காவல்துறையின் கடமை தானே.
3.) “மாதந்தோறும் 1000 ரூபாய் கொடுக்கிற புதுமை பெண் திட்டத்தின் மூலமாக கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை 30% அதிகரித்து இருக்கிறது” என்று கூறுகிறீர்கள். மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பது வரவேற்க தகுந்த திட்டம் தான். ஆனால் அதற்காக தவறான தரவுகளை வெளியிடக் கூடாது. கடந்த 5 ஆண்டுகள் பெண்கள் கல்லூரியில் சேர்ந்த விகிதத்தை பட்டியலாக வெளியிட்டு எப்படி 30% அதிகரித்துள்ளது என்பதை காட்டுங்கள். மேலோட்டமாக பார்த்தால் இது தவறான தகவல் போல் தெரிகிறது.
4.) “இந்தியாவிலேயே பாதுகாப்பு மிக்க முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது” இப்படி ஒரு பொய்யை சொல்வதற்கு உங்கள் மனம் துளியும் உருத்த வில்லையா? தமிழகத்தில் அதிகப்படியிலான பெண்கள் வன்கொடுமை, சட்ட ஒழுங்கு சீர்கேடு உங்கள் ஆட்சியில் தான் ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்க வாய் கூசாமல் எப்படி உங்களால் இப்படி சொல்ல முடிகிறது?
5.) “வரம்புகளுக்கு உட்பட்டு தான் தமிழ்நாடு அரசு கடன் வாங்கி உள்ளது” என்று கூறுகிறீர்கள் ஆனால் கடன் வாங்கப்பட்ட பணம் எங்கு செலவு செய்யப்பட்டுள்ளது? அதனால் மக்கள் பலனைடைந்துள்ளார்களா அல்லது உங்கள் அமைச்சர்கள் பலனைடைந்துள்ளார்களா?
6.) “டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு வழிவகுத்தது அதிமுக தான்” என சொல்கிறீர்கள். எவ்வளவு நாட்கள் தான் இப்படியே அடுத்தவர்கள் செய்த தவற்றை சொல்லி உங்கள் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிப்பீர்கள்? நீங்கள் தானே இன்றைக்கு ஆளும் கட்சி. எடப்பாடி பழனிசாமியின் பலவீனத்தால் தான் நீங்கள் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிறீர்கள் உங்கள் பலத்தில் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
7.) ” தமிழ்நாட்டில் இதுவரை 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.” என்று சொல்கிறீர்கள். நீங்கள் தமிழகத்தில் இன்று வரை ஆட்சிப் பொறுப்பேற்று 1321 நாட்கள் தான் ஆகிறது. அதிலேயே 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக சொல்கிறீர்கள். அப்படி என்றால் ஒரு நாளுக்கு சராசரியாக 75 போராட்டங்களை நீங்கள் அனுமதித்திருக்கிறீர்கள். இன்னும் நீங்கள் அனுமதிக்காத போராட்டங்கள் ஏராளம். இந்த ஒரு உண்மையே உங்கள் ஆட்சியில் மக்கள் படும் வேதனைகளுக்கும், அவலங்களுக்கும் சாட்சி என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை. மக்கள் என்ன மகிழ்ச்சி வெள்ளத்திலா போராட்டம் நடத்துகிறார்கள்? தங்கள் எதிர்ப்பை இந்த அரசாங்கத்திற்கு தெரிவிக்கத்தானே போராட்டம் நடத்துகிறார்கள்.