சட்டம் ஒழுங்கு என்னாச்சு? அடித்தே கொல்லப்பட்ட வடஇந்தியர்.. கலங்கிய கரூர்.. தமிழ்நாட்டில் இப்படியா?


தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளன. கரூரில் நேற்று முதல்நாள் நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்ட ஒழுங்கில் தமிழக அரசு சொதப்புகிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

கரூரில் வடஇந்தியர் ஒருவர் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் வடஇந்தியாவில்தான் நடக்கும். குழு வன்முறைகள் அதிகம் வடஇந்தியாவில்தான் நடக்கும். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது அதேபோல் நடக்கும் சம்பவங்கள் மக்களை உலுக்கி உள்ளன.

கரூரில் வாங்கல் கிராமத்தில் வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் வெளியிட்ட ஆதாரங்களின்படி, கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பூர்ணிமா அளித்த புகாரின் அடிப்படையில், கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் அருகே 30 முதல் 35 வயதுடைய ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அதன்பின் அந்த மர்ம மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் வட இந்தியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவரை ஐந்து பேர் அடிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து அவரது மரணம் கொலையாக பதிவு செய்யப்பட்டது.

வீடியோவில் இருந்த நபர்கள் எம் வினோத்குமார், எம் கரண்ராஜ், முத்து, பி கதிர்வேல் மற்றும் எம் பாலாஜி என அடையாளம் காணப்பட்டனர். இதில் போலீசார் மூலம் வினோத்குமார், கதிர்வேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை மேற்கோள்காட்டி போலீசார் கூறுகையில், இறந்தவர் சனிக்கிழமை மாலை வினோத்குமாரின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுவிட்டார். இதையடுத்து, 5 பேரும் அவரை விரட்டிச் சென்று கட்டையால் தாக்கி, பைக்கை மீட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இவர் பைக்கை திருடியதால் அந்த கும்பல் அவரை அடித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்தான் கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. கள்ளக்குறிச்சி விவகாரம் திமுகவிற்கு மிகப்பெரிய அவப்பெயரை கொடுத்துள்ளது. திமுக எதிர்பார்க்காத பிரச்சனையாக கள்ளக்குறிச்சி பிரச்சனை உருவெடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் 62 பேர் பலியாகி உள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த விவகாரம்தான் இத்தனை மரணங்களுக்கு காரணம். இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளன. சட்டம் ஒழுங்கில் தமிழக அரசு சொதப்புகிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. போலீசார், உள்துறை சட்டம் ஒழுங்கை கவனிக்க முடியாமல் சொதப்புகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Share on: