சமூக ஆர்வலர் மீது துப்பாக்கிச்சூடு..


கடலூர் அருகே விருத்தாச்சலத்தில் சமூக ஆர்வலர் இளையராஜா என்பவர் மீது 6 பேர் கும்பல் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மணவாளநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் இளையராஜா. இவர் முன்னாள் எம்.எல்.ஏ தியாகராஜனின் மூன்றாவது மகன் ஆவார். இவர் திமுக உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மாவட்ட பொருளாளர் ஆவார். விருத்தாச்சலத்தில் வள்ளலார் குடில் என்ற பெயரில் முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் நடத்தி வருகிறார்.வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக காரில் ஏறியதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த மர்ம கும்பலினர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

முதுகுப்பகுதியில் குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் கிழே விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இளையராஜாவை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி இளையராஜா கூறுகையில், மணவாளநல்லூர் கிராமத்தை ராஜசேகர் மகன்கள் ஆடலரசன், புகழேந்தி ஆகிய இருவர்தான் தன்னை துப்பாக்கியால் சுட்டதாக கூறினார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். கடலூரில் சமூக ஆர்வலர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share on: