சவுக்கு சங்கரை கஸ்டடியில் எடுக்கும் போலீஸ்.. கோவை நீதிமன்றம் அனுமதி.. ஆனால்.. ஒரு கண்டிஷன்!
கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி உள்ள யூ டியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அவர் ஒருநாள் போலீசார் மூலம் விசாரணை செய்யப்படுவார். இந்த வழக்கு விசாரணையின் போது போலீசார் தன்னை துன்புறுத்துவதாக சவுக்கு சங்கர் தரப்பு இன்று கோர்ட்டில் கூறியது . இதையடுத்து போலீஸ் காவல் விசாரணையின்போது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை வழக்கறிஞரை சவுக்கு சங்கர் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதாவது போலீஸ் காவல் விசாரணையின் போது 3 மணி நேரங்களுக்கு ஒருமுறை ஒரு சில நிமிடங்கள் மட்டும் சவுக்கு சங்கரை அவரின் வழக்கறிஞர் சந்திக்க முடியும்.
சோதனை; குண்டாஸ் பிரிவில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சவுக்கு சங்கர் இன்று மருத்துவம் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார். சவுக்கு சங்கருக்கு வலது கையில் மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் கோவை சிறையில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக முழக்கம் போட்டார். மீண்டும் வலது கையில் மாவு கட்டு போட்டு அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த முடிவுகள் கோர்ட் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்.
ஏற்கனவே யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் வீடுகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது குண்டாஸ் பதியப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில். சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் (எ) சவுக்கு சங்கர். 1/48, த/பெ.ஆச்சிமுத்து, மதுரவாயல், சென்னை என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு. தற்போது கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத்திய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, அவர்கள் சங்கர் (எ) சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை. கோயம்புத்தூர் சிறையில் உள்ள சங்கர் (எ) சவுக்கு சங்கர் என்பவருக்கு இன்று (12.05.2024) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.
அவர் மீது சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சங்கர் (எ) சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும். மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது, என்று கூறியுள்ளனர்.