சாம்சங் நிறுவனத்தின் கையாளாக தமிழக அரசு.. இது தான் திராவிட மாடலா? சிபிஐ கண்டனம்..
சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போராட்ட பந்தல் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இதே போல், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க நிர்வாகிகளை இரவில் வீடு தேடி போலீஸ் அராஜகமாக கைது செய்து வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டு, கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து அமைச்சர்கள் அன்பரசன், டிஆர்பி ராஜா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிஐடியு தொழிற்சங்க பதிவை தவிர மற்ற கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு பிரிவு தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதாக உறுதியளித்த நிலையில், சிஐடியு மட்டும் போராட்டத்தை தொடர்வதாகவும், அவர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் டிஆர்பி ராஜா நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக போராட்ட குழுவினர் அமைத்திருந்த பந்தலை போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது.
மேலும் சாம்சங் தொழிலாளர்களை வீடு வீடாகச் சென்று கைது செய்வதாகவும், பேருந்துகளில் செல்பவர்களையும் தடுத்து விதிகளை மீறி கைது செய்யப்படுவதாக வீடியோக்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்வதற்காக வந்த நிலையில் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து தடையை மீறி அவர்கள் பேரணியாக சென்ற நிலையில் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க நிர்வாகிகளை இரவில் வீடு தேடி போலீஸ் அராஜகமாக கைது செய்து வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான பதிவில், சாம்சங் நிறுவனத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் 30 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்த பந்தலை நேற்று இரவு போலீஸ் அராஜகமாக அகற்றியுள்ளனர். காவலர்கள் குவிக்கப்பட்டு போராட்டத்திற்கு வருகிற தொழிலாளர்களை கைது செய்ய தயாராக உள்ளன. போராடும் இடத்தை அராஜகமாக போலீஸ் அகற்றிய பிறகும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் 31வது நாளாகத் தொடர்கிறது. கோரிக்கை வெல்லும் வரை போராட்டம் தொடரும்” என கூறப்பட்டுள்ளது.