சிக்கலில் தமிழகத்தைச் சேர்ந்த 50 அரசு அதிகாரிகள்.. லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்த அதிரடி முடிவு!
‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் தமிழகத்தை சேர்ந்த 50 அதிகாரிகள் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
சொந்த வீடு கட்டுவது என்பது ஏழை-எளிய, நடுத்தர மக்களின் கனவாக உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.சென்னை போன்ற நகர்புறங்களில் 600 சதுர அடியில் அடுக்குமாடி வீடு வாங்கவே ஆயுள் முழுவதும் உழைக்க வேண்டிய நிலை இருக்கிறது. சொந்த வீடு வாங்குவது என்பது இன்றைய நிலையில் அசாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது.
விலைவாசி உயர்வுகளுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்க வைத்து, திருமணம் நடத்தி, வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம் ஆகும். இப்படியான சூழலில் சொந்த வீடு கனவை நனவாக்கும் வகையில் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சத்து 77 ஆயிரம் பணம் வழங்குகிறது.
இந்த திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மோசடி அரங்கேறி இருப்பதை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த திட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
உதாரணமாக சொல்வது என்றால், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள சணபத்தூர் கிராமத்தில் வீடுகளை கட்டாத பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 66 ஆயிரம் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறதாம். இதேபோன்று இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லாதவர்கள் பெயரிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதாம். அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணங்கள் தயாரித்து ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரதமர் வீடு கட்டடும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பணியாற்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் 50 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் நாகப்பட்டினத்தில் 146 பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியின் ரூ.1 கோடி அளவுக்கு முறைகேடு புகார் எழுந்திருக்கிறதாம். அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 அதிகாரிகள் மீது கடந்த மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது இந்த மோசடி வழக்கில் 50 அதிகாரிகள் சிக்கி இருப்பபது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கை பாயும் என்றும், இவர்கள் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.