செம்ம போட்டி! பறக்கப் போவது செங்கொடியா? திராவிட அதிமுக கொடியா? வலதுசாரி பாஜக கொடியா?


பின்னலாடை நகரமான திருப்பூர் தொகுதியில் திமுக- இடதுசாரிகள் மற்றும் அதிமுக வாக்கு வங்கி அதிகம். பாஜகவின் நம்பிக்கைக்குரிய தொகுதிகளில் ஒன்றாகவும் திருப்பூர் இருந்து வருகிறது.

திருப்பூர் லோக்சபா தொகுதியில் உள்ளடங்கிய சட்டசபை தொகுதிகள்: பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர் வடக்கு திருப்பூர் தெற்கு. திருப்பூர் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற 2 தேர்தல்களில் அதிமுகவும் கடந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான சிபிஐ வென்றது.

திருப்பூர் லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 15,98,443; ஆண்கள்- 7,86,475; பெண்கள்- 8,11,718; 3-ம் பாலினத்தவர் 250

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்: சிவசாமி(அதிமுக) 2,95,731 கார்வேந்தன் (காங்கிரஸ்) 2,10,385 பாலசுப்பரமணியன்(கொமுபே) 95,299 தினேஷ்குமார்(தேமுதிக) 86,933

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் சத்தியபாமா(அதிமுக) 4,42,778 செந்தில்நாதன்(திமுக) 2,05,411 தினேஷ்குமார்(தே.மு.தி.க) 2,63,463 ஈவிகேஎஸ் இளங்கோவன்(காங்கிரஸ்) 47,554

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

கே. சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்) 5,08,725 ஆனந்தன்(அதிமுக) 4,15,357 சந்திரகுமார்(மக்கள் நீதி மய்யம்) 64,657 செல்வம்(அமமுக) 43,816 ஜெகநாதன்(நாம் தமிழர் கட்சி)42,189

2024-ல் களம் காணும் வேட்பாளர்கள்

கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) அருணாச்சலம் (அதிமுக) முருகானந்தம் (பாஜக) சீதாலட்சுமி( நாம் தமிழர் கட்சி)

திருப்பூர் தொகுதி நிலவரம்: பின்னலாடை நகரம் என புகழ்பெற்றது திருப்பூர். திருப்பூர் நகரத்தைத் தவிர இதர பகுதிகளில் விவசாயம்தான் பிரதானமாக உள்ளது. நெல், கரும்பு, வாழை, தென்னை, பருத்தி உள்ளிட்டவை பிரதான சாகுபடி. தயிர், வெண்ணெய் உற்பத்தி, விசைத்தறித் தொழிலும் இங்கு முதன்மையானவை. வட மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் வெளி மாவட்டத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் இங்கே குடியேறி உள்ளனர். திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள்தான் மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பு, திருப்பூர் தொகுதியை பொறுத்தவரை திமுக, சிபிஐ, அதிமுக வலுவான வாக்கு வங்கியைக் கொண்டவை. பாஜகவும் இங்கு கணிசமான வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் நம்பிக்கைக்குரிய தொகுதிகளில் ஒன்றாக திருப்பூர் இருந்து வருகிறது. ஆனால் இந்த தேர்தலில் பாஜக பெறும் வாக்குகள்தான் இந்த நம்பிக்கையின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும். இடதுசாரி சிபிஐயும் வலதுசாரி பாஜகவும் நேரடியாக களம் காண்கின்றன. திமுக- இடதுசாரிக்கு இணையான வாக்கு வங்கி கொண்ட அதிமுகவும் சவால்விடுக்கும் வகையில் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறது. தமிழர் நலன் பிரச்சனைகள், சூழல் சார்ந்த பிரச்சனைகளை பேசுகிறது நாம் தமிழர் கட்சி.
Share on: