ஜெயலலிதாவுக்கு ஹிந்துத்துவா சாயல் பூசுவதா? அண்ணாமலைக்கு கே.சி.பழனிசாமி கண்டனம்!
ஜெயலலிதாவுக்கு ஹிந்துத்துவா சாயல் பூசுவதா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதற்கிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதன்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கியை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திமுகவின் இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை தனது கட்சி நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், இந்துத்துவா தலைவரான, அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தமிழக அரசியலில் பாஜக நிரப்புகிறது என்றார்.
இதுகுறித்து கே.சி.பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜெயலலிதா அம்மா மிகச்சிறந்த திராவிட தலைவர், சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் பெற்றவர். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் மீது இதுபோன்ற ஹிந்துத்துவா சாயல் பூசுவது கடும்கண்டனத்திற்குரியது.
ஹிந்துத்துவா சித்தாந்தங்களில் சிலவற்றை அமல்படுத்தியதில் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிந்தவுடன் அந்த உத்தரவுகளை திரும்பப்பெற்றார். அதன்பின்தான், பொது மேடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் நான் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் அதற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் இனி மேல் எந்நாளும் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று உங்களிடம் எனது வாக்குறுதியாக கொடுக்கிறேன் என்றார்.
உங்கள் வாக்குவங்கி அரசியலுக்காக தவறான தகவல்களை வெளிவிடாதீர்கள். ஜெயலலிதா அம்மா அவர்கள் திராவிட சித்தாந்தத்தில் வந்தவர். அதை அவர் சட்டமன்றத்திலேயே பதிவு செய்திருக்கிறார்.” என பதிவிட்டுள்ளார்.