“ஞானசேகரன் தான் செய்தார் என்பதற்கு ஆதாரம் இருக்கு”.. கோர்ட்டில் சொன்ன போலீஸ் தரப்பு!


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என தமிழக அரசு போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஞானசேகரன் என்பவர் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில், ஞானசேகரனுக்கு எதிராக மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால், இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தபட்டார். வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து முகாந்திரங்களும் உள்ளதாகவும், இவர் தான் குற்றம் புரிந்து உள்ளார் என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளதால், ஞானசேகரனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது எனவும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஞானசேகரன் தன்னை விடுவிக்க கோரிய மனு மீது வாதங்களை முன் வைப்பதற்காக, விசாரணையை நீதிபதி நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.
Share on: