தத்தளிக்கும் விழுப்புரம்.. ஆங்காங்கே நின்ற ரயில்கள்.. 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்.. எந்தெந்த இடங்கள்?
விழுப்புரத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. விக்கிரவாண்டி – முன்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில்வே பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஆங்காங்கே பாதி வழியில் நிறுத்தப்பட்டன. ரயில் சேவை பாதிப்படைந்த நிலையில், 100 சிறப்பு பேருந்தகளை அறிவித்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. மாவட்டத்தின் பல இடங்களும் வெள்ளத்தில் மிதந்தது. விழுப்புரம் பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்த நிலையில் ரயில் சேவையும் கடுமையாக இன்று பாதித்தது.
விக்கிரவாண்டி – முன்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில்வே பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. அபாயகரமான சூழல் அங்கு காணப்பட்டதால் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் ரயில்வே பாலத்தின் மீது வெள்ளம் ஓடியதால் சென்னை எழும்பூர் – நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தென்காசி, ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சென்னை – தென் மாவட்டங்கள் இடையே இன்று 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவை – தாம்பரம் சிறப்பு ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டது. கொச்சுவேலி – தாம்பரம், நாகர்கோவில் – தாம்பரம் ஆகிய ரயில்கள் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டன. ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதால் விழுப்புரம் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ரயில்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வே அதிகாரிகள் கோரிக்கையை ஏற்று 100 சிறப்புப் பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தென்னக ரயில்வே விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பொது மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள ரயில் நிலையங்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, ஃபெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக, 30.11.2024 மற்றும் 01.12.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம். திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளானார்கள். மேற்கண்ட விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு. பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
மேலும், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் களத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிவுறுத்தியதன் அடிப்படையிலும், தென்னக ரயில்வே விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, திருச்சி – சென்னை ரயில் வழித்தடம் மற்றும் விழுப்புரம் – காட்பாடி ரயில் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட்டு இடையில் ரயில்கள் நிறுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள பயணிகளை பாதுகாப்பாக அவர்களது சொந்த இடங்களுக்கு செல்லும் வகையில், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் மாம்பழப்பட்டு இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள்.
வெங்கடேசபுரம் இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள், விழுப்புரம் இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள், அரகண்டநல்லூர் இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள் மற்றும் சென்னை செல்லும் பயணிகள் வசதிக்காக வழக்கமாக செல்லும் பேருந்துகளுடன் கூடுதலாக 40 பேருந்துகள் என மொத்தம் 100 சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.