
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். இதற்கு அருகிலேயே தனது பழைய வீட்டை இடித்துக் கட்டி வருகிறார். தினமும் மாலையில் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அதேபோல, இன்றும் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை அரிவாளாலும் கத்தியாலும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். உடனிருந்த இரண்டு பேருக்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. உடனடியாக செம்பியம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். உடனிருந்த இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வடசென்னையின் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், “தற்போது 8 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணைதான்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தினால்தான் கொலை குறித்த முழுமையான காரணம் தெரிய வரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் கொல்லப்பட்ட பிஎஸ்பியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியும் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரி அவரது ஆதரவாளர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
இதனால் பரபரப்பான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் போக்குவரத்து அரை மணிநேரத்திற்கும் மேலாகத் தடைபட்டது. அவர்களுடன் காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு அவர்கள் இணங்காத நிலையில், அனைவரையும் கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே திரண்ட அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான காலை வேளையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாகத் தடைபட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் உடல்கூறாய்வு முடிந்த நிலையில், அவரது உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்தனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சரணடைந்தவர்களை உண்மைக் குற்றவாளிகளாகக் கருதக்கூடாது. தீர விசாரித்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையைத் தொடர்ந்து பெரம்பூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம் ஆறு பேர் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. அந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்துள்ள காவல்துறை, தனிப்படை அமைத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.