தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், சென்னை உட்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. மேலும் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வங்கக்கடலில் புயல் உருவாவது இயல்பான ஒன்றாக மாறியிருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. தொடக்கத்தில் ஏற்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால் தற்போது சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
கனமழையை பொறுத்தவரை இன்று மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் என 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
நாளை, மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் என 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் அரியலூர் என 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர, நாளை மறுநாள் அதாவது நவ.27ம் தேதி கடலூர் மற்றும் மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அன்றைய தினம் விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வட மாவட்டங்களை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களான பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.