தாம்பரம் அருகே லஞ்சத்தை தந்து, கையோடு கால் டாக்ஸி டிரைவர் பார்த்த வேலை.. ஆடிப்போன போலீஸ்காரர்கள்


அரசு ஊழியர்கள் அல்லது போலீசார் லஞ்சம் வாங்கியது தெரியவந்தால், அவர்களது உயர் அதிகாரிகள் கண்டிப்பாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள்.. ஒழுங்கு நடவடிக்கை என்பது பணியிடை நீக்கமாகவே இருக்கும். கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை உள்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை, உயர்கல்வித்துறை, பள்ளிகல்வித்துறை என எந்த அரசு துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டினால் சிறை தண்டனை உறுதி..

அதேநேரம் பொதுமக்கள் யாரிடமாவது லஞ்சம் வாங்கியது அவர்களின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியவந்தால், அந்த ஊழியர் மீது பணியிடை நீக்க நடவடிக்கையை உயர் அதிகாரிகளால் எடுக்க முடியும். அதேபோல் பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பு உள்ளது. காவலர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். காவலர்கள் லஞ்சம் வாங்கியது தெரியவந்தால், அவர்களை சஸ்பெண்ட் செய்ய முடியும். குறைந்தபட்ச தண்டனையாக ஆயுத படைக்கும் மாற்ற முடியும்… இல்லாவிட்டால் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய முடியும்.

அந்த வகையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரின் எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த செந்தில், தர்மன் ஆகிய 2 காவலர்கள் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் கன்னிவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கன்னிவாக்கம் பகுதியில் கால் டாக்சியை ஓரமாக நிறுத்திவிட்டு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த டிரைவரிடம் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் விசாரித்த போது அவர் மது குடித்த நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து 2 காவலர்களும், உன் மீது வழக்கு போடாமல் இருப்பதற்கு ரூ.1,500 லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு கால் டாக்சி டிரைவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினாராம்.. ஆனால் 2 காவலர்கள் டிரைவரிடம் ‘கூகுள் பே’ வில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் ரூ.2 ஆயிரம் இருக்கும் என்று கூறினாராம். அந்த 2 போலீஸ்காரர்களும் உடனடியாக நாங்கள் சொல்லும் ‘கூகுள் பே’ எண்ணுக்கு ரூ.1,500 அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து கால் டாக்சி டிரைவர் உடனடியாக காவலர்கள் கூறிய எண்ணுக்கு ரூ.1,500-ஐ ‘கூகுள் பே’ மூலம் அனுப்பியிருக்கிறார். இதை தொடர்ந்து அங்கிருந்து 2 காவலர்களும் சென்று விட்டனர்.

இது சம்பந்தமாக கால் டாக்சி டிரைவர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவங்கள் பற்றி கூறினாராம். இந்த விவரம் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக்கின் கவனத்திற்கு வந்தது. அவர் சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரர்களை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். உயர் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் கால் டாக்சி டிரைவரிடம் இருந்து மற்றொரு நபரின் ‘கூகுள் பே’ எண் மூலம் 2 காவலர்களும் ரூ.1,500 லஞ்சமாக பெற்றது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து ‘கூகுள் பே’ மூலம் ரூ.1,500 பெற்ற செந்தில், தர்மன் ஆகிய 2 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் அதிரடியாக உத்தரவிட்டார்.
Share on: