திருச்சி – ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்: வகுப்பறையில் நிகழ்ந்த கொடூரம்!
சமீபகாலமாக பள்ளிகளில் மாணவர்கள் மத்தியின் சாதி மோதல்களும், வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நாங்குநேரி அருகே சக மாணவனை வீடு தேடிச் சென்று அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தடுக்க முயன்ற மாணவரின் தங்கையையும் அரிவாளால் வெட்டினர்.
இதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே மாணவர்கள் மோதலில் ஈடுபடும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் திருச்சியில் வகுப்பறையில் ஆசிரியரை மாணவன் வெட்டிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன் ஒருவன் வெளி ஆட்களை அழைத்து வந்து வகுப்பறைக்குள் புகுந்து ஒரு மாணவனை வெட்டியுள்ளார். அப்போது அதை தடுக்க முயன்ற ஆசிரியர் சிவகுமார் தலையிலும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனால் படு காயமடைந்த ஆசிரியர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.