திருவண்ணாமலை விவசாயி மீதான குண்டர் சட்டம் ரத்து.


திருவண்ணாமலையில் மேல்மா சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து போராடிய விவசாயி அருள், குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், அவர் மீதான குண்டாஸ் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட்-ன் 3வது அலகை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுத்தது. இதற்காக, மேல்மா, குரும்பூர், காட்டுகுடிசை, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, வட ஆளாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் மற்றும் வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் வேளாண் நிலம் கையகப்படுத்தப்பட திட்டமிட்டிருந்தது.

அரசை பொறுத்தவரையில் இந்த நிலம் தரிசு என்று சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு நெல், மணிலா, கரும்பு, கேழ்வரகு, பூக்கள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அரசி திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்துதான் வருகிறது.

அரசு சொல்வதை போல இது தரிசு நிலம் கிடையாது என்றும், இது வேளாண் நிலம் என்று கூறி திருவண்ணாமலை மக்கள் ‘மேல்மா சிப்காட்’ விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் தொடர்பாக 72 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இருப்பினும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்படி இருக்கையில் 126வது நாளாக கடந்த நவம்பர் 4ம் தேதியன்று இவர்கள் பேரணி நடத்தியபோது பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் என 7 பேர் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவு பேரில் குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் மேலெழுந்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர். திமுகவின் கூட்டணி கட்சிகளும், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், விவசாயி அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
Share on: