அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்,ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிப்பதாக உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கடந்த 2022-ல் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி அதிமுக விதிகளை மாற்றியமைத்தார்.
கட்சியிலிருந்து தொடர்ந்து காரணமின்றி உறுப்பினர்களை நீக்கிய எடப்பாடி பழனிசாமி மத்திய பாஜக அரசிற்கு ஆதரவாக பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்தார்.
அதிமுக கட்சியின் சுய அமைப்பை இபிஎஸ் படிப்படியாக மாற்றியமைத்து மதவாத அரசியலுக்கு ஆதரவாக செயல்பட துவங்கியதன் விளைவு, தமிழகத்தில் அதிமுகவை மக்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த பொழுது,பாஜக அரசியலை கடுமையாக விமர்சித்து வந்தார்.பிரதமர் மோடி தமிழகத்தில் உள்நுழைய பல்வேறு எதிர்ப்பலைகள் ஓங்கி இருந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு,இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜெயலலிதாவின் பாஜக எதிர்ப்பை தவிடு பொடியாக்கி விட்டார்.
மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் பாஜக கூட்டணி அதிமுகவிற்கு வேண்டாம் என்று கே.சி.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் மறுத்தாலும் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் உறுதியாக இருக்கிறார்.
பல்வேறு வழக்குகளுக்கு பிறகு தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.நீதிமன்றங்களும் சட்டங்களும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருந்தாலும்,அவரை ஏற்றுக்கொள்ளுவது மக்கள் மன்றம் ஒன்றுதான்.தேர்தல்களில் போட்டியிட்டு தொடர்ந்து எட்டு முறை தோல்வியடைந்த இபிஎஸ் வரும் நாடாளுமன்ற தேர்தலிலாவது வெற்றி பெற்று பலத்தை நிரூபிப்பரா என்பதை வரும் காலங்களில் பார்ப்போம்.
எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ வீழ்த்தி அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று அதிமுகவின் பொதுச்செயலாளராக பெறுப்பேற்று கொண்டது உண்மையில் வெற்றியாகாது.நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வெற்றி பெற்றால் மட்டுமே இபிஎஸ்-ஐ அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் அதிமுக பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகும்.