தொடரும் வாயுக் கசிவு! 9 மாணவிகளுக்கு மயக்கம்! சென்னை திருவொற்றியூர் பள்ளி தற்காலிகமாக மூடல்


சென்னை திருவொற்றியூர் விக்டரி பள்ளியை திறந்த முதல் நாளிலேயே வாயு கசிவால் 9 மாணவிகள் மயங்கி விழுந்ததை அடுத்து பள்ளியை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் விக்டரி பள்ளியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி திடீரென வாயுக் கசிவால் 35 மாணவர்கள் மயங்கி விழுந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் பள்ளிக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே பள்ளியை திமுக எம்பி கலாநிதி வீராசாமி, பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் விக்டரி பள்ளி 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் திறப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து பள்ளி நிர்வாகத்துடன் இன்று காலை வாக்குவாதம் செய்தனர். வாயுக் கசிவு எதனால் வந்தது, அதை சரி செய்தாகிவிட்டதா போன்ற எந்த கேள்விகளுக்கும் விடைச் சொல்லாமல் பள்ளியை திறக்கக் கூடாது என வாக்குவாதம் செய்தனர்.

அப்போது சில மாணவிகள் தங்கள் வகுப்பறைக்குச் சென்றனர். அப்போது அவர்களில் 9 மாணவிகளுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சிலருக்கு மூச்சுத்திணறலும் இருந்ததால் பதறிய பெற்றோர் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளியை கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து வாயுக் கசிவிற்கான காரணத்தை கண்டறியும் வரை பள்ளியை தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டனர்.
Share on: