“நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர்!” – உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் காட்டம்


“நீங்கள் சொன்ன கருத்துகளின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர்” என்று சனாதனம் தொடர்பான வழக்கில் உதயநிதி மீது காட்டமாக அதிருப்தியை வெளியிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம்’ என்று பேசினார்.

உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, உதயநிதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களையும் தொடுக்கப்பட்ட வழக்குகளை தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “நான் பேசியதன் விளைவை நன்கு அறிவேன். 6 மாநிலங்களில் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. எல்லா மாநிலங்களுக்கும் என்னால் செல்ல முடியாது. பொதுவான ஒரு இடத்தில் விசாரிக்க வேண்டும், விசாரணையை எதிர்கொள்ள நான் தயார்” என்று உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. உதயநிதியின் மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவின் கீழ் உங்கள் உரிமையை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் சட்டப்பிரிவு 25-ன் கீழ் உங்களின் உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள்.

சனாதனம் தொடர்பாக நீங்கள் சொன்ன கருத்துக்களின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர். ஓர் அமைச்சராக இருந்து தனது சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். சொல்லும் கருத்துக்களின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும்” என்று அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Share on: