நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு


கருணை அடிப்படையில் சத்துணவு திட்ட அமைப்பாளராக பணி வழங்குமாறு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள பால்வார்த்து வென்றான் கிராமத்தை சேர்ந்த கோமதி என்பவருக்கு கருணை அடிப்படையில் 8 வாரத்தில் சத்துணவு அமைப்பாளராக நியமித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு பணி வழங்காத திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோமதி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் வழக்கறிஞர் எஸ்.தமிழ்செல்வன், மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அரசு சார்பில் இரு நீதிபதிகள் அமர்வில் வாதிடப்பட்டதாக கூறினார்.
Share on: