நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்.. ஐகோர்ட் வார்னிங்


கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தமிழக அரசின் தலைமைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து கள்ளச்சாராய உற்பத்தி மையமாகச் செயல்படும் கல்வராயன் மலைப் பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அப்பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை நான்கு வாரங்களில் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், என். மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி அடையாள அட்டைகளை வழங்குவதற்காக முகாம்கள் நடத்தப்பட்டதாகவும் அதில் 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

அதனை பரிசீலித்து அடையாள அட்டைகளை வழங்க மூன்று மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அடையாள அட்டைகள் வழங்கிய பின்னர் அது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், எங்களுக்கு அறிக்கை வேண்டாம் எனவும் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை தான் வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதற்கு மூன்று மாதங்கள் என கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தனது வாதத்தில் சாலை வசதிகள், பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை எனக் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், கல்வராயன் மலைப் பகுதியில் இரண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்குவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், அரசு அளிக்கும் விவரங்கள் போதுமானதாக இல்லை எனவும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட முடியாது எனக்கூறிய நீதிபதிகள் ஆனால் அந்த அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் தான் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கல்வராயன் மலைப் பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, கல்வராயன் மலைப் பகுதியில் மினிப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து விழுப்புரம் மற்றும் சேலம் கோட்ட போக்குவரத்து மேலாண் இயக்குநர்கள் நேரிலோ அல்லது காணொளி மூலமாகவோ நாளை பிற்பகல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், ஆசிரியர்களுடன் பள்ளிகள் இயங்குவது தொடர்பாகவும், மருத்துவர்களுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுவது தொடர்பாகவும், சாலை வசதிகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Share on: