நீலகிரி ரெட் அலர்ட்.. களமிறங்கிய பேரிடர் மீட்புப் படை.. சுற்றுலா பகுதிகளுக்கு தடை!


கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வந்துள்ளனர். மேலும் படகு சவாரி, தொட்டப்பெட்டா சிகரம், பைன் பாரஸ்ட் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகவும் முன்கூட்டியே கோடை காலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை மே 24 ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை மலைப்பகுதி, திருநெல்வேலி மலைப்பகுதி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டது.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு நாளை (மே 25) மற்றும் நாளை மறுநாள் (மே 26) ஆகிய இரண்டு நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மே 27 ஆம் தேதி கோவை மற்றும் நீலகிரியில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சென்றுள்ளனர். முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளுக்காக அந்த மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் வெள்ள அபாயம் பகுதிகளில் ஆய்வு செய்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஊட்டி, குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 30 பேர் ஊட்டி சென்றுள்ளனர். மொத்தம் 283 இடங்கள் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

அந்த வகையில் தென் மேற்கு பருவமழைக்கான நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லலிதா ஐஏஎஸ்., மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஊட்டி தலையாட்டு மந்து, நொண்டிமேடு ஆகிய இடங்களில் பேரிடரால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், “மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளைமுதல் மூன்று நாட்களுக்கு ‘TREK TAMILNADU’ என்ற தலைப்பில் வனப்பகுதிக்குள் நடை பயணம் மேற்கொள்ளவும் தடை செய்யப்படுள்ளது. இங்கு காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்

ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர் பகுதிகளுக்கு 42 டீம்கள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இந்த 4 தாலுக்காக்களில் துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரிகள் கண்காணிப்பில் உள்ளனர். மரங்கள் ஆங்காங்கே விழும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மரங்களுக்கு அருகே வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ” என்றார்.

அதேபோல சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி நாளை 25ம் தேதி ஒரு நாள் பைன் பாரஸ்ட் மற்றும் தொட்டபெட்டா சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Share on: