பகீர்! மற்றொரு பள்ளியிலும் சிறுமி பாலியல் வன்கொடுமை.. சிவராமன் மீது 2வது போக்சோ வழக்கு பாய்ந்தது!


கிருஷ்ணகிரியில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்திய போது 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் கடந்த 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை என்.சி.சி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த குற்றம் தெரிந்தும் அதை மறைக்க முயற்சி செய்த பள்ளியின் முதல்வர், தாளாளர் உட்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சிவராமன், போலியாக ஆவணங்களை தயார் செய்து ஏமாற்றியதும் அம்பலமாகி உள்ளது.

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும், பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரை ஆலோசித்து அவர்களின் நலம் காத்திட சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று விசாரணை தொடங்கியது.

இதற்கிடையே, சிவராமன் தன்னை வழக்கறிஞர் என்று கூறி ரூ.36 லட்சம் ஏமாற்றியதாக நேற்று எஸ்.பி அலுவலகத்தில் 7 பேர் புகார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் சிவராமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் என்சிசி முகாம் நடத்திய போது 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி கந்திகுப்பத்தில் போலி என்.சி.சி முகாம் நடத்தி தனியார் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிவராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பாலியல் வழக்கையும் சேர்த்து, சிவராமன் மீது 3-வது வழக்கு பாய்ந்துள்ளது.

இதற்கிடையே, கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டதை அடுத்து அவருக்கு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Share on: