படிச்சது வெறும் 10வது.. ஆனா பேரு மட்டும் “மகா விஷ்ணு”.. 2கே போலி சாமியார்.. வளர்ந்தது எப்படி?


மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முழுக்க பலரும் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். தன்னை கடவுளின் அவதாரம் என்று ஆங்காங்கே சொல்லிக்கொண்டு.. பெயரையும் கூட மகா விஷ்ணு என்று மாற்றிகொண்டு.. “நடித்தபடி” சுற்றித்திரியும் போலி சாமியார் விஷ்ணுவை கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

கடவுள் இல்லைன்னு சொல்றவனை நம்பலாம்.. கடவுள் இருக்குன்னு சொல்றவனை கூட நம்பலாம்.. ஆனா நான்தான் கடவுள்ன்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்பாதே என்று நடிகர் கமல்ஹாசன் ஒரு வசனம் சொல்வார். அப்படி நம்ப கூடாத.. தன்னை தானே அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் நபர்தான் இந்த மகா விஷ்ணு.

ஓஷோ என்ற தத்துவ ஞானி இருந்தார். அமெரிக்காவில் பெரும் கூட்டமே அவர் பின் நின்றது. தன்னை அவர் கடவுள் என்று சொன்னதும் இல்லை. அவதாரம் என்றதும் இல்லை.. மாறாக பூமி என்ற கிரகத்திற்கு நான் பிறப்பு முதல் இறப்பு வரை பயணம் மேற்கொண்டுள்ளேன்.. என்று தன் ஆன்ம தேடலை சாதாரணமாக விளக்கிவிட்டு சென்றார்.. எனக்கெல்லாம் அவ்வளவு சீன் இல்லை என்பது போல தன்னையே சிறுமைப்படுத்தி பேசினார். அவரை காப்பி அடித்து.. அதில் கொஞ்சம் மதத்தை கலந்து பேசும் பொய் சாமியார்கள் பலர் உள்ளனர்.

இன்னும் சில பொய் சாமியார்கள் சாதாரணமாக சொன்னா கேட்க மாட்டாங்க.. கொஞ்சம் சயின்ஸை சேர்த்து சொல்லுவோம் என்று.. அணு அறிவியல் தொடங்கி குவாண்டம் பிசிக்ஸ் வரை கண்டதையும் அரைகுறையாக மேய்ந்துவிட்டு.. கூடவே மதத்தை கலந்து கொத்து பரோட்டாவாக பார்சல் செய்து கொடுப்பார்கள். அப்படி ஒரு பரோட்டா மாஸ்டர்தான் இந்த “மகா விஷ்ணு”. தன்னை அவதாரம் என்று “பெருமைப்படுத்தி” சொல்லிக்கொள்ளும் இவர்.. அதை சொல்லிக்காட்டவே இந்த மகா விஷ்ணு பெயரை வைத்துள்ளார்.

பிராடுகள்தான் பெரும்பாலும் இப்படி சொல்லிக்கொள்வார்கள் என்ற விமர்சனம் உள்ள நிலையில்தான் திருப்பூர் மாவட்டத்தில் பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் இந்த விஷ்ணு. ஒரு காலத்தில் இந்த மகா விஷ்ணு சிறு வயதில் முன்னணி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வந்தார். யோவ் மிலிட்டரி நீ எங்கயா இங்கே என்பது போல.. அவதாரம் ஒன்று அசத்த போவது யாருக்கெல்லாம் வந்து இருக்கிறது.

மதுரை மகா என்ற பெயரில் வந்து காமெடி செய்தவர்.. இப்போது தன்னை அவதாரம் என்று கூறி காமெடி செய்து வருகிறார். அவரது பேச்சாற்றல் பலரையும் கவர்ந்த நிலையில் தற்போது வளர்ந்து தனது பாதையை மாற்றியுள்ளார் இந்த மகா விஷ்ணு. மகாவிஷ்ணு பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையில் பரம்பொருள் வாழ்வியல் வகுப்பு என்ற பெயரில் ஆசிரமம் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஆசிரமம் மூலம் பேமஸ் ஆகலாம் என்பதால் இப்படி செய்ததோடு இவர் போலி மருத்துவரும் கூட.. சித்த மருத்துவம் படித்து இருப்பதாக கூறி காயகல்ப லேகியம் விற்பனையும் செய்து இருக்கிறார் மகா விஷ்ணு.

இந்த லேகியம் சாப்பிட்டவர்களுக்கு பல நாள் உடல்வியாதிகள் குணம் அடைந்ததாக கூறி அடித்து விட்டு குறும்பு செய்துள்ளார். அதோடு மகாவிஷ்ணு தயாரித்துள்ள “நான் செய்த குறும்பு” என்ற திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளி வருகிறது. சினிமா – மருத்துவர் – ஆன்மிகம் – அவதாரம் என்று இவர் தசாவதாரங்களை எடுத்து பல இடங்களில் கை வைத்துள்ளார்.

தான் பெருமாளின் அவதாரம் என குடுகுடுப்பைக்காரர் தனது தாயிடம் சொன்னதாக கூறிய மகா விஷ்ணு அதை வைத்தே கல்லா கட்டி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு திருப்பூரில் பரம்பொருள் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலம், ஆன்ம தேடலுக்கு வழிகாட்டுவதாக கூறி கட்டண வகுப்புகளை நடத்தி வருகிறார்.

வெறும் 10-ம் வகுப்பு படித்தவர்.. ஆசிரியர்கள் முன் அகந்தையாக பேசுவது.. அவரை விட அதிகம் படித்த மாணவர்களுக்கு அறிவுரை கூறுவது எல்லாம்.. என்ன கொடுமையோ? இதை தமிழக பள்ளிக்கல்வித்துறை.. அந்த தலைமை ஆசிரியர்கள் எப்படி அனுமதித்தார்களோ.. தெரியவில்லை. ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுதல், விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி அளித்தல் என்று இவர் உதவிகளை செய்ததாகவும் ஒரு பக்கம் கூறப்பட்டாலும்.. இவர் போலி என்றும் பலர் புகார்களை வைக்கின்றனர். இவர் போலியோ.. உண்மையோ.. பள்ளியில் பேசுவதற்கு இவர் யார் என்ற கேள்வியே பலரிடமும் இருக்கிறது.

இவரை தீவிரமாக நம்பும் பலர் இருக்கிறார்.. இவரை தீவிரமாக எதிர்க்கும் பலரும் இருக்கிறார்கள்.. தன்னை அவதாரம் என்று சொல்லிக்கொள்பவனை நம்பி பின்னால் செல்வது என்பது அவரவர் விருப்பம்.. ஆனால் அவரை பற்றி தெரியாத பள்ளி குழந்தைகளிடம் இப்படிப்பட்டவரை அறிமுகப்படுத்தி.. முன்னேறி உள்ள தமிழ்நாட்டை 60 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுவிடாதீர்கள்.. இப்படிப்பட்டவர்களை அழைக்கும் முன் ஒரு முறை.. கமல் சொன்ன மேற்கண்ட வசனத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
Share on: