பதறவைத்த வீடியோ! மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்! நெல்லை நீட் பயிற்சி மைய உரிமையாளர் மீது 3 வழக்குகள்


திருநெல்வேலி நீட் பயிற்சி மையத்தில் கண்மூடித்தனமாக மாணவர்களை பிரம்பால் கொடூரமாக தாக்கியது மற்றும் மாணவி மீது காலணியை வீசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படத்தியது. இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் 3 பிரிவுகளின் கீழ் நீட் பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன் அஹமத் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட மருத்துவ மேற்படிப்புகளுக்கு ‛நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முக்கிய நகரங்கள் நீட் பயிற்சி மையங்கள் உள்ளன. அந்த வகையில் திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் உள்ளது.

இந்த மையத்தில் மாணவர்களும், மாணவிகளுக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் மாணவ-மாணவிகள் மீது தாக்குதல் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது பயிற்சி மைய வகுப்பறையில் மாணவ – மாணவிகள் அமர்ந்து இருக்கின்றனர். அப்போது உள்ளே வரும் ஒருவர் மாணவி மீது காலணி கொண்டு எறிந்து தாக்குகிறார். அதேபோல் மாணவர்களை ஆக்ரோஷமாக திட்டி பிரம்பால் தாக்குகிறார். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து மேலப்பாளையம் போலீசார் விசாரணையை தொடங்கினர். உதவி காவல் ஆணையர் சரவணன் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தை சேர்ந்தவர்கள் நீட் பயிற்சி மையத்துக்கு சென்று மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட மாணவர்களில் 2 பேர் சிறார்கள் என்பது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி மனித உரிமைகள் ஆணையத்தை சேர்ந்தவர்கள் நீட் தேர்வு மையத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி சம்பவம் தொடர்பாக விசாரித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் 21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளிடம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே தான் மேலப்பாளையம் போலீசார் நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஜலாலுதீன் அஹமத் மீது 3 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளரான ஜலாலுதீன் அஹமத் மீது சட்டப்பிரிவு 323 (தாமாக முன்வந்து இன்னொருவரை காயப்படுத்துதல்), 355 (ஒருவரை அவமதிக்கும் நோக்கத்தில் தாக்குதல் நடத்துவது), 75 ஜேஜே சட்டத்தை (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Share on: