பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வெட்டிய கும்பல் யார்? கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளராக உள்ள நேசபிரவு என்பவரை மர்ம நபர்கள் நேற்று நோட்டம் விட்டு கொடூரமாக வெட்டியுள்ளனர். அவர் கடைசியாக போலீசிடம் போனில் உதவி கேட்டபடி பேசிக்கொண்டிருக்கும் போதே வெட்டப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காமநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு, இவர் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருகிறார். நேசபிரபு நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் இவரை தொடர்ந்து வேவு பார்த்தபடி சென்றுள்ளனர். நேசபிரபு யார், எந்த ஊர் என்று கேட்டு அவரது தந்தையிடமே தகவல்களையும் விசாரித்துள்ளனர்.
இதனிடையே தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் கொடுத்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக போலீசிடம் நேசபிரபு கூறியுள்ளார். அப்போது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. நேரில வந்து புகார் அளிக்குமாறு கூறினார்களாம்.
இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டிருக்கிறார். அப்போது காமநாயக்கன்பாளையம் தலைமை காவலர் கண்ணன் என்பருடன் நேசபிரபு பேசுகையில், “வந்துட்டே இருக்கானுங்க சார்… எவ்ளோ தடவைதான் பாக்றது? பல்லடம் போலீஸ்கிட்டே சொல்லி பிடிக்க சொல்லுங்க சார். எல்லா கேமராலயும் அவங்க முகம் பதிஞ்சிருக்கும். இந்த பெட்ரோல் பங்க் கேமரால கூட இருக்கும். எதுவேணா நடக்கலாம் சார்..எல்லாருக்குமே வயசு 26க்குள்ள தான் இருக்கும். எல்லாமே தமிழ்காரங்கதான்.. இந்திக்காரங்க இல்லை.. என் அப்பாவிடமே அட்ரஸ் கேட்டு போய்ருக்காங்க. ஆறு பேர் இருப்பாங்க..
ஒரு டைம் இல்லை ரெண்டு இல்லை சார்.. இது நாலு தடவை.. இரண்டு பைக்கில் ஹெல்மெட் போட்டு வந்தாங்க… என்றார். அப்போது போலீசார் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும், இன்ஸ்பெக்டருக்கு அழைக்குமாறும் கூறியுள்ளனர். அப்போது திடீரென அங்கு அந்த கும்பல் வந்ததை பார்த்த நேசபிரபு போலீசிடம், “வந்துட்டாங்க சார்.. வாழ்க்கையே முடிஞ்சது” என காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு காவல்துறை வேகமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தாக்குதல் நிகழும் சற்று முன் கூட போலீசிடம் செய்தியாளர் பாதுகாப்பு கோரும் செல்போன் ஆடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே செய்தியாளரை தாக்கிய மர்ம கும்பல் யார் என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.