பாஜகவிடம் சரணாகதி அடைய தொண்டர்கள் மீதும் தலைவர்கள் மீதும் பழி போடுவது ஏன்.? இபிஎஸ்க்கு எதிராக சீறும் கேசிபி


தன்னையும், தன் குடும்பத்தையும் மற்றும் முன்னாள் அமைச்சர்களை வழக்குகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பாஜகவிடம் சரணாகதி அடைய தொண்டர்கள் மீதும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதும் ஏன்? பழி போடுகிறார் என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கேசி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பணபலதை அடிப்படையாக வைத்து ஏன்?

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாகவும், அதிமுக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததாக வெளியான தகவல் தொடர்பாகவும் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தலில் போட்டியிட யாரும் முன்வரவில்லை அதனால் புதியவர்களுக்கு சீட்டு கொடுத்தேன் என்பதே அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தை அவமானப்படுத்துவது ஆகாதா? சாதாரண தொண்டர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கலாமே.

பணபலதை அடிப்படையாக வைத்து ஏன்? நான்கு ஆண்டு காலம் EPS முதலமைச்சராக இருந்த பொழுது கட்சி நிதி என்று பல ஆயிரம் கோடிகளை நீங்களும், முன்னாள் அமைச்சர்களும் வாங்கி குவித்தீர்களே அந்த பணங்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் சொந்தமாக்கிக் கொண்டீர்களா? ஏன் அந்த பணங்கள் கட்சி வெற்றிக்காக செலவிடபடவில்லை?

ஒன்று பட்ட அதிமுக தேவை

பூத்களில் பூத் ஏஜென்ட்கள் சரிவர வேலை செய்யவில்லை. அதிமுக பூத் ஏஜெண்டுகள் எல்லாம் திமுகவின் விலை போய்விட்டனர் என்று சொல்கிறீர்களே விலைபோனது அவர்களா? அல்லது நீங்கள் தேர்வு செய்த வேட்பாளர்களா? அந்தந்த பகுதிகளில் தொண்டர்கள் சரியாக பணியற்றவில்லை என்று ஏன் தொண்டர்கள் மீது குறை கூறுகிறீர்கள்? நீங்கள் தலைமைக்கு உண்டான தகுதியோடு இந்த இயக்கத்தை வழி நடத்துகிறீர்களா? ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க முயற்சி செய்தீர்களா? உங்களால் கட்சியில் இருந்து பலர் நீக்கப்பட்டுள்ளனர் மற்றும் வெளியேறியுள்ளனர் அது ஏன்? ஒன்று பட்ட அதிமுக தேவை என்பதை நீங்கள் உணர மறுப்பது ஏன்?

தேர்தல் காலங்களில் உங்கள் பிரச்சாரம் மக்களை, வாக்காளர்களை கவரும் படியாக அமைந்ததா? கடந்த மூன்று ஆண்டுகளாக பொறுப்பான எதிர் கட்சியாக திமுகவிற்கு எதிராக அரசியல் செய்தீர்களா? உங்கள் மீதும் உங்கள் முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் வந்துவிட கூடாது என்று மறைமுக ஒப்பந்தத்தோடு தானே பயணித்தீர்கள். கடந்த சில ஆண்டுகளாக பாஜக எதிர்ப்பு என்பதை முன்னெடுத்து. மத்திய அரசு செய்கிற தவறுகளையும் அதனால் ஏற்படுகிற பாதிப்புகளையும் எதிர்த்து நீங்கள் செயல்பட்டதுண்டா?

பொறுப்பேற்காமல் தொண்டர்கள் மீது பழி

அம்மா காலத்தில் தன் மீது வழக்குகள் வந்தாலும் அந்த வழக்குகளை சட்டபடி எதிர்கொண்டாரே தவிர மத்திய ஆளும் கட்சியோடும் மாநில ஆளும் கட்சியோடும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. ஆனால் EPS சமரசம் செய்துகொண்டதன் விளைவு தான் தேர்தல் களத்தில் தொண்டர்கள் உற்சாகம் இழந்து இருக்கிறார்கள். அதை நீங்கள் ஏதோ தொண்டர்கள் சரியாக பணியற்றவில்லை என்று பழிபொட நினைக்க வேண்டாம். கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரச்சார வியூகம், பிரச்சாரத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷயங்கள் போன்ற பல முன்னெடுப்புகளில் நீங்கள் தவறிழைத்து விட்டு அவற்றுக்கு நீங்கள் பொறுப்பேற்காமல் தொண்டர்கள் மீது பழி போடுகிறீர்கள்.

தேர்தல் முடிவுக்கு பிறகு தீர்வு

குமாரபாளையத்தில் நேற்று இரவு 11 மணிக்கு அதிமுக – திமுக தொண்டர்களிடையே மோதல் மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது அது ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. இதில் இருந்து தெரிகிறது #அதிமுக தொண்டர்கள் திமுகவை களத்தில் எதிர்த்து நிற்கிறார்கள். ஆனால் அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சரியான தேர்வா? EPS இந்த இயக்கத்தை உருவாக்கியவரோ, வளர்தவரோ அல்ல என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். உங்கள் பணபலதாலும் பாஜக ஆதரவாலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் கொள்கைகளுக்கு விரோதமாக தொண்டர்களின் உரிமையை பறித்து கட்சியை இன்று உங்கள் கட்டுபாட்டில் வைத்துள்ளீர்கள். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தொண்டர்கள் சரியான தீர்வை நோக்கி பயனிப்பார்கள் என கே.சி.பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Share on: