பாதி வழியிலேயே நிற்கும் அரசு பஸ்கள்! அனுபவமில்லாத டிரைவர்களால் பயணிகள் அவதி! விபத்துக்கள் அதிகரிப்பு?


போக்குவரத்து தொழிலாளர்கள் 8 ஆண்டுக்கால கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அனுபவம் இல்லாத ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இப்படி இயக்கப்படும் பேருந்துகள் விபத்தில் சிக்குவதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

தேசிய அளவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழக மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதியை போக்குவரத்து கழகங்கள் வழங்கி வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, கிராமங்களுக்கும், நகரங்களுக்குமான இணைப்பு என தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வாழ்வில் போக்குவரத்து கழகங்கள் மிக சிறப்பான் பங்களிப்பை செய்து வருகின்றன. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அரசு தரப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தன. எனவே நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், “தனியார் பேருந்துகள் லாபத்தில் ஓடும்போது, போக்குவரத்து கழகங்கள் ஏன் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற தவறான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. போக்குவரத்து கழகங்கள் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை. இழப்பு ஏற்படும் என தெரிந்தே 10,000க்கும் மேற்பட்ட கிராமப்புற, மலை வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்கள், பெண்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவச பேருந்து சேவை அளிக்கும் அரசின் திட்டம் போக்குவரத்து கழகங்களால் அமுல்படுத்தப்படுகிறது. இதனால் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டுவது கிடையாது.

தமிழக மின்வாரியம், சிவில் சப்ளை கார்ப்பரேசன் போன்றவற்றிற்கு முழுமையான இழப்பை ஈடுகட்டும் அரசு, தினமும் 2 கோடி மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களைப் புறக்கணிக்கின்றது. அவசரத் தேவைக்காக போக்குவரத்து கழகங்களுக்கு அவ்வப்போது அரசு வழங்கும் பணத்திற்குகூட வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து கழகங்களை சிறப்பாக செயல்படுத்த வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்.

கடந்த 2017ஆம் ஆண்டு 23,000 பேருந்துகள் இயங்கி கொண்டிருந்தது. இதே 2018ஆம் ஆண்டு பேருந்து எண்ணிக்கை 19,500ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக பணி ஓய்வுபெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படவில்லை. சுமார் 20.000 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில் பணியாளர் பற்றாக்குறையால் தினமும் சுமார் 1500 பேருந்துகளை இயக்க முடியவில்லை. ஓட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் 4000 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்களின் பயண உரிமை மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பேருந்துகள் சீராக இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், சில இடங்களில் அனுபவம் இல்லாதவர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதால் ஆங்காங்கே பாதி வழியில் பேருந்துகள் நின்றுவிடுகின்றன. சேலத்தில் ஐந்து ரோடு பகுதியில் அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்றிருக்கிறது. கடைசியில் பயணிகள் அனைவரும் சேர்ந்து அரசு பேருந்தை தள்ளி ஓரமாக நிறுத்தியிருக்கின்றனர்.

திண்டிவனத்தில் மழை வெள்ளமாக ஓடும் பாலத்தை கடக்க முயன்றபோது அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்றிருக்கிறது. பேருந்தில் இருந்த பயணிகள் வெள்ளத்தில் இறங்கி நடந்தே சென்று பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில், பேருந்து நிலையத்தின் உள்ளே இருந்த கடை மீது பேருந்து லேசாக மோதியுள்ளது. இதில் கடையின் கண்ணாடி கதவுகள் உடைந்திருக்கின்றன. சில இடங்களில் பேருந்துகள் சாலையை விட்டு பள்ளத்தில் இறங்கியிருக்கின்றன.

எனவே தொடர் விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்றும், தற்காலி மற்றும் அனுபவம் இல்லாத ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
Share on: