
ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தால், பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியான விவசாயியின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கப்பட வேண்டிய சுகாதார நிலையம் எப்படி பூட்டியிருந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் புதுராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த முரளி என்ற விவசாயி, அவருடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 6 ம் தேதி விவசாயம் செய்து கொண்டிருந்த போது, முரளியை பாம்பு கடித்தது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள கண்ணன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
காலதாமதமாக அழைத்து சென்றதால் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 24 மணி நேரமும் இயங்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தால் தான் தன்னுடைய கணவரை பலியானதாக கூறி அவரின் மனைவி அருணா வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் கண்ணன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் குழந்தைகளின் கல்வி செலவையும் அரசு ஏற்க வேண்டும் என முரளியின் மனைவி அருணா கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலியான முரளியின் மனைவி அருணாவுக்கு அரசு துறையில் தற்காலிக அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டார்.
மேலும் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவுக்காக ரூ 2 லட்சத்தை அவர்களுடைய வங்கி கணக்கில் 2 வாரத்தில் அரசு செலுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.