போலீஸ் ஸ்டேசனிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! கல்வீசி தாக்கியதில் போலீஸ் காயம்! பரபரத்த தேனி.
தேனியில் போதைப் பொருள் நுண்ணறிவு காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து ஏர்கன், 24 செல்போன்கள், கஞ்சா ஆயில் உட்பட ஏராளமான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிர்ச்சியாக கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் செல்லும் போது பிடிக்க முயன்ற முதல் நிலை காவலர் மீது கல்வீசி தாக்கப்பட்டதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் தேனி சமதர்மபுரத்தில் போதைப் பொருள் நுண்ணறிவு காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் போது பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, செல்போன்கள், வாகனங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று காவலர்கள் வழக்கமான ரோந்து பணிக்கு சென்றிருந்த நிலையில் காவல் நிலையம் பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் இரண்டு கொள்ளையர்கள் காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
அப்போது அவ்வழியாக வந்த இரவு காவல் பணியில் இருந்த முதல் நிலைக் காவலர் முருகேசன் என்பவர் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து அவர்களை சோதித்த போது, அவர்களிடம் ஏர்கன், செல்போன்கள் என ஏராளமான பொருட்கள் இருந்ததால் விசாரணைக்காக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார். அப்போது இரண்டு பேரும் அவரை தள்ளி விட்டு தப்பிச் செல்ல முயன்றனர். இதனையடுத்து கொள்ளையர்களை காவலர் பிடிக்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடிய நிலையில், பின்னால் துரத்திச் சென்று பிடிக்க முயன்ற போது, இருவரும் சேர்ந்து முருகேசன் மீது கல் வீசி தாக்கியதில் முருகேசனின் தலையில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த மற்றொரு சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் என்பவரிடம் முருகேசன் நடந்ததை கூறிய போது, இருவரும் சேர்ந்து துரத்தியதில் கொள்ளையர்களில் ஒருவர் பிடிபட்டார்.
இதனைத் தொடர்ந்து கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில், அவன் பெயர் நிதீஷ் குமார் (23) என்பதும் பண்ணைப்புரம் வடக்குத் தெருவை சேர்ந்தவன் என்பதும், அவனுடன் சேர்ந்து கொள்ளையடித்த மற்றொருவன் கோம்பையைச் சேர்ந்த உதயகுமார் (24) என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து 24 செல்போன்கள், ஒரு ஏர்கன், இரண்டு கேமராக்கள், மைக் கேமரா ஒன்று, ஒரு பைனாக்குலர், வெள்ளை பவுடர், கஞ்சா ஆயில் 650 ML, 50 கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து உதயகுமார் தப்பி ஓடிய நிலையில், நிதிஷ்குமாரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த முருகேசன் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக பிடிபட்ட குற்றவாளி நிதீஷ்குமார் தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து ஏர்கன் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்ததுடன், போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர்.